‘எச்-1 பி’ விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை – அமெரிக்கா அறிவிப்பு

‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக உள்ளார்.

இந்த நிலையில், ‘எச்-1 பி’ விசாக்களை நீட்டிப்பதை தடுக்கிற வகையில், புதிய கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் கொண்டுவரப்போகிறது என அமெரிக்காவின் ‘மெக்கிளாட்சி’ செய்தி நிறுவனம் கடந்த வாரம் தகவல் வெளியிட்டது.

இது அமெரிக்க வாழ் இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு பேரிடியாக அமைந்தது. விசாக்களை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் ஏறத்தாழ 7½ லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழல் உருவாகும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘எச்-1 பி’ விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்து உள்ளது.

இதுபற்றி அதன் தலைமை செய்தித்துறை அதிகாரி ஜோனத்தான் விதிங்டன் ஒரு அறிக்கையில் கூறுகையில், “ ‘எச்-1 பி’ விசாக்களை வைத்திருப்பவர்கள், நாட்டை விட்டு வெளியேறுகிற விதத்தில், எந்த ஒரு ஒழுங்குமுறை மாற்றத்தையும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு பரிசீலிக்கவில்லை. அப்படியே மாற்றம் கொண்டுவந்தால்கூட, அந்த மாற்றமானது ‘எச்-1 பி’ விசாக்களை வைத்திருப்போர் நாட்டை விட்டு வெளியேறுகிற நிலைமையை உருவாக்காது. ஏனென்றால் 21-ம் நூற்றாண்டு சட்டம் விதி எண். 106(ஏ) (பி)படி, முதலாளிகள் ஓராண்டு ஊதிய உயர்வின் அடிப்படையில், நீட்டிப்பு கோர முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிலை வராது என்பது அமெரிக்க வாழ் இந்திய தொழில் நுட்பத்துறையினருக்கு நிம்மதி தருவதாக அமையும்.

அதே நேரத்தில், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற ஜனாதிபதி கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கு வேலை வாய்ப்பு சார்ந்த விசாக்கள் தொடர்பான கொள்கைகளை முழுமையான ஆய்வு செய்கிறோம்” என அவர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY