எச்சரிக்கையை தொடர்ந்து GSP+ வரிச்சலுகை தொடர்பில் மங்கள ஐரோப்பாவுடன் பேச்சு!

ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழு உறுப்பினர்களுடன் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மேற்கொண்ட முடிவினை அடுத்து, மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை தனது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறுத்துவது குறித்து சிந்திக்கவேண்டி வரும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போது இலங்கையில் மீண்டும் ஸ்திர நிலை உருவாகியுள்ள நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினர் ஜெப்ரி வான் ஒர்டன் மற்றும் வில்லியம் டார்ட்மவுத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் மங்கள சமரவீரர் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது வர்த்தக ரிதியான பரஸ்பர ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கலந்துகொண்டிருந்ததார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து இலங்கையில், ஊழலை ஒழிப்பதற்கும், மனித உரிமைகளை பேணுவதற்கும், நீதியின் ஆதிபத்யத்தை உறுதி செய்வதற்கும் மேலும் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி கவனம் செலுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியமை தொடர்பில் கருத்திற்கொண்டு, மீண்டும் அவ்வரி (GSP+) விலக்களிப்பை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.