ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு

பீகார் முதல்வராக, 1994 – 1996ல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், 89.27 லட்சம் ரூபாய் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.

ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தார்.அப்போது, ‘லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி’ என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தண்டனை விவரத்தை அறிய லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், வழக்கறிஞர் விண்டேஸ்வரி பிரசாத் காலமானதால், தண்டனை விவரத்தை நாளைக்கு அறிவிப்பதாக சிபிஐ நீதிபதி அறிவித்தார். இதன்படி லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY