ஊழல் மோசடி குற்றச்சாட்டு: சவுதி இளவரசருக்கு விடுதலை!

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இடம்பெற்ற கைதுநடவடிக்கைகளை விமர்சித்த குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சவுதி மன்னர் சல்மானின் மருமகனான இவர் கடந்த ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 10 மாதங்களின் பின்னர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரது சகோதரனும் பிரபல தொழிலதிபருமான அல் வாலித் பின் தலாலை அவர் சந்தித்துள்ளார். குறித்த இருவருக்குமிடையிலான சந்திப்பை நீதிமன்றம் தடைசெய்திருந்த நிலையில், விடுதலையின் பின்னர் சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சவுதி மன்னர் சல்மானுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரமே அவர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இவ்வருட ஆரம்பத்தில் சவுதியின் 200இற்கும் மேற்பட்ட இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அந்நாட்டு மன்னரின் உத்தரவின் பேரில் அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர். சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களை தன்னிச்சையாக கைதுசெய்ததாக விமர்சித்த குற்றத்திற்காகவே இளவரசர் காலித் பின் தலால் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.