ஊடகவியலாளர்கள் சமூக பொறுப்புடன் செயற்பட வேண்டும் – ஆளுநர் வலியுறுத்து

மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.

International Media Support (IMS) அமைப்பு யாழ். ஊடக அமையத்துடன் இணைந்து வட. மாகாண ஊடகவியலாளர்களுக்காக நடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை யாழில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாண சபையின்கீழ் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக எல்லோரும் அறிந்துகொள்ளக்கூடியதான வழிமுறைகளை விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்த ஆளுநர், இந்த செயற்பாடு மக்களுக்கு தகவல் வழங்கும் உரிமையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

70களில் வறுமையான மாநிலமாக காணப்பட்ட இந்தியாவின் தமிழ்நாடு மாநிலமானது தற்போது இந்தியாவின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் இரண்டாவது மாநிலமாக மாறியிருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டின் சில ஊடகவியலாளர்களே என சுட்டிக்காட்டினார்.

போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர் தேசத்தினை கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் சமூகப்பொறுப்புடனும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.