உளவுத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக மஹிந்த கவலை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையில் முக்கியமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையினால் உளவுத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக கவலை எழுந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

இருப்பினும் நாடாளுமன்ற தேர்வுக்குழுவில் முக்கியமான தகவல்கள் விவாதிக்கப்படுகின்றமையினால் உளவுத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கவலையளிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த விடயம் மிலேனியம் சிட்டி சம்பவத்தை போல ஒன்றே என சுட்டிக்காட்டிய மஹிந்த ராஜபக்ஷ, புலனாய்வாளர்களின் அடையாளம் இந்த விசாரணைகள் மூலம் வெளிகொண்டுவருவதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என கூறினார்.

இவ்வாறு அரசியல் ஆதாயத்திற்காக திறந்த வெளியில் இத்தகைய விசாரணைகள் நடத்தக் கூடாது என ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதனை அடுத்து கருத்து தெரிவித்த சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு தகவலும் இருந்தால் அதனை தெரிவிக்க வேண்டாம் என தெரிவுக் குழுவின் முன் அழைக்கப்படும் அனைவருக்கும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தகவல்கள் எவையும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக தெரிவிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.