உலக சுகாதார அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்படாத தடுப்பூசியை பயன்படுத்தாது.

கொரோனா வைரஸுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் ஒருபோதும் உலக சுகாதார அமைப்பினால் ஒப்புதல் வழங்கப்படாத தடுப்பூசிக்கு மக்களை கினிப் பன்றிகளாக பயன்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கொரோனா வைரஸை குணப்படுத்துவதில் 95% வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ அதிகரிகள், அரசு ஊழியர்கள், முப்படையனர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் எடுத்த முடிவுகளின்படி, தொற்றுநோயின் இரண்டாவது அலைகளையும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.