உரிமையினை போன்று அபிவிருத்தியும் எமக்கு அவசியம் – அங்கஜன்

உரிமைக்கான அரசியல் போராட்டத்தையும் கொண்டு செல்ல வேண்டிய அதேவேளை மக்களிற்கான அபிவிருத்தியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கஜன் இராமநாதனின் கிராமமட்ட இளைஞர் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உரிமைக்காக அரசியல் போராட்டம் எல்லாவற்றையும் தாண்டி வந்துள்ளோம். இவை அனைத்தையும் தாண்டி இன்று நாம் இருக்கின்ற இடத்தில் என்ன தேவைகள் என்பதை பார்க்க வேண்டும்.

அன்று போராட்டம் இடம்பெற்றபோது எம்மிடம் அனைத்தும் இருந்தது. அந்த நிலையில் எமக்கு உரிமைக்கான போராட்டம் தேவையாக இருந்தது. ஆனால் இன்று நாங்கள் இருந்த அனைத்தையும் இழந்துள்ளோம்.

அதற்காக நாம் போகும் திசையை மாற்ற வேண்டிதில்லை. அதேவேளை இழந்தவற்றை நாம் பெறாமல் 70 வருட போராட்டத்தை முன்னெடுத்ததில் அர்த்தம் இல்லை. உரிமையை மக்களிற்கே பெற்று கொடுக்க போகின்றோம். இவ்வாறான நிலையிலிருந்து மீள்வதற்காக நாம் நிதானமாக செயற்பட வேண்டும்.

உரிமைக்கான அரசியல் போராட்டத்தையும் கொண்டு செல்ல வேண்டிய அதேவேளை மக்களிற்கான அபிவிருத்தியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்