‘‘உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மசூர் பருப்பு’ இல்லாமல் சமைக்கலாம்!’’

கேசரி பருப்பு என்றும் மசூர் பருப்பு என்றும் அழைக்கப்படும் ஆரஞ்சு நிறப் பருப்பு, தமிழக சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது நாம் அறிந்ததே. இந்தப் பருப்புக்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறு ஒளிந்திருக்கிறது.

மைசூர் பருப்பில் டி-அமினோ-ப்ரோ-பியோனிக் ஆசிட்(di-amino-pro-pionic acid) உள்ளது. இதனைத் தொடர்ந்து உணவில் பயன்படுத்தினால் கால் மூட்டுக்கள் மற்றும் தண்டுவடம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளை இழந்து பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டு, தேசிய அளவில் தடை செய்ய இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரைத்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய மத்திய அரசு 1961-ம் ஆண்டு மைசூர் பருப்புக்கு தேசிய அளவில் தடை விதித்தது. இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார் நாக்பூரைச் சேர்ந்த மைக்ரோபயாலஜிஸ்ட் கோத்தாரி. ”இந்தத் தடையால் வடமாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். அதனால், தடையை நீக்க வேண்டும்” எனப் போராடி வெற்றிகண்டார்.

வடமாநிலங்களில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள தால், மசாலா, சூப், காய்கறி கிச்சடி, மிக்ஸடு சென்னா மசாலா, அடை எனப் பல்வேறு உணவுப் பதார்த்தங்களில் மைசூர் பருப்பை பயன்படுத்துகின்றனர். அதோடு, அழகியல் துறையில் முகத்தைப் பளபளப்பாக்க, கூந்தல் அழகுக்கு எனப் பயன்படுத்தப்படுகிறது. துவரம் பருப்பு அதிக விலையாக இருந்தபோதும், தமிழகத்தில் வெகு சிலரே மைசூர் பருப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் மதிய உணவுத் திட்டத்தில் மைசூர் பருப்பே பயன்படுத்தப்பட்டது. இதனால், உடலுக்கு ஏற்படும் தீங்கை முன்னிறுத்தி, 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சத்துணவில் பயன்படுத்தத் தடை கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நியாய விலை கடைகளில் மைசூர் பருப்பு வழங்கத் தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது.

இதனை எதிர்த்து தமிழக கால்நடை துறை முன்னாள் இயக்குநர் அஸ்தி ஜெகநாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரண் மற்றும் சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, மைசூர் பருப்பைத் தமிழக நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க இடைக்காலத் தடை விதித்தனர். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மசூர் பருப்பை ரேசன் கடைகளில் வழங்க தமிழக அரசு ஏன்முயற்சி எடுக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மைசூர் பருப்பு தமிழக அளவில் எந்தெந்த உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது? அதன் முக்கியத்துவம் போன்றவற்றை பற்றிப் பேசிய சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி, ‘‘தமிழகத்தில் மைசூர் பருப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. துவரம் பருப்பின் விலை அதிகம் என்பதால், சிலர் மாற்றாகப் பயன்படுத்திட்டு வருகிறார்கள். துவரம் பருப்பின் விலையைக் கருத்தில் கொண்டு ஹோட்டல்களில் மசூர் பருப்பு பயன்படுத்துகின்றனர். முன்பு சத்துணவுத் திட்டத்தில் மசூர் பயன்படுத்தப்படும் போது குறைந்த விலையில் பரவலாக அப்பருப்பு மக்கள் மத்தியில் விற்கப்பட்டது. பார்க்கிறதுக்கு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்தப் பருப்பு, வெந்ததும் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும். துவரம் பருப்பில் செய்யும் உணவில் இருக்கும் டேஸ்ட் மைசூர் பருப்பில் இருக்காது. துவரம் பருப்பில் புரோட்டீன் அதிகம் இருக்கும். எனவே,, மைசூர் பருப்பு எந்தவிதத்திலும் உடலுக்கு நல்லதில்லை”

LEAVE A REPLY