ஈஸ்டர் தாக்குதலுடன் மஹிந்த, கோட்டாவுக்கு தொடர்பு – லக்ஷ்மன்

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் தற்போதைய புதிய அரசாங்கத்திற்கு தொடர்பிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மறைமுகமாக சாடியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ரணில்-மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திற்கு கலங்கம் ஏற்படுத்தவும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் காரணமாக இருந்த இந்த தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஒருவருடமாகின்ற நிலையிலும் இதுவரை பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்படவில்லை.

ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த வருடம் நடத்தப்பட்ட தாக்குதலினால் மக்களிடையே இன ஐக்கியம் வீழ்ந்தது.

இந்த தாக்குதல் காரணமாகவே எமது அரசாங்கம் தோல்வியுற்றது. இந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.

ஈஸ்டர் தினத் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை இந்த அரசாங்கம் கைது செய்யாது என்பதை நிச்சயமாகக் கூறுகின்றேன்.

இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமைக்கான காரணம், ஈஸ்டர் தாக்குதலாகும். சஹ்ரானுக்கு ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அம்பலப்படுத்தப்பட்டது.

ஆகவே யார் இதற்குப் பின்னால் செயற்படுகிறார்கள் என்பது புலனாகின்றது. எமது அரசாங்கத்தை அவமானத்திற்கு ஏற்படுத்துவதற்கான செயற்பாடாகவே இந்த தாக்குதலையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.