ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றம்

யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பிராந்திய மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி, தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை புறக்கணித்து செயற்படுகின்ற நிலையில், தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உறுதியான ஒரு மாற்று அணி தேவை என்பதோடு இக்கொள்கையுடைய அரசியல் சக்திகளை ஒன்றிணைய வேண்டும் என்று கோரியுள்ளது.

அத்துடன் இலங்கையில் நடைபெற்ற யுத்தக்குற்ற விசாரணைப் பொறிமுறையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம், தனது தீர்மானத்தின்படி இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, இந்த விடயத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கோ அல்லது ஒரு பிரத்தியேக தீர்ப்பாயத்திற்கோ கையளிக்கும்படி கோரப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும் என்பதோடு, ஐ.நா.வின் தீர்மானத்திற்கமைய, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேச நியமனங்களுக்கு ஏற்ப முழுமையான விசாரணை நடத்தி, நீதிவழங்குமாறு இம்மாநாடு ஐ.நாவை கேட்டுக்கொள்கிறது.

இதனைவிட, முப்படையினரும் வடக்கு-கிழக்கில் விவாசயம் மற்றும் வர்த்தகங்களில் ஈடுபடுவதை நிறுத்துதல், வேலை வாய்ப்புக்களில் அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கல்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்தல் என்பதோடு, ஐ.நா.வின் தீர்மானத்திற்கமைய, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேச நியமனங்களுக்கு ஏற்ப முழுமையான விசாரணை நடத்தி, நீதிவழங்குமாறு இம்மாநாடு ஐ.நா.வை கேட்டுள்ளது.

அத்துடன், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது தொடர்பாகவும் இலங்கை இந்திய அரசாங்கங்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றது.

வடக்கு மாகாணத்தில் போதைவஸ்து பாவனை முன்னெப்பொழுதையும்விட இப்பொழுது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், போதைவஸ்தைக் கடத்துவோர், கையிருப்பில் வைத்திருப்போர், அதனை விற்பனை செய்வோர், அவற்றை பயன்படுத்துவோருக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு இப்போதைவஸ்து பாவனை ஒழிக்கப்பட வேண்டும் என்று பொலிஸாரையும் நீதித்துறையையும் கோரியுள்ளது.

வடக்கில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை என்பவற்றிற்கூடாக பலநூறுபேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே இந்தத் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும் இம்மாநாடு கோருகிறது.

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,000 போராளிகளை பயங்கரவாதிகள் என்று ஒதுக்கிவிடாமல், இவர்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு அரசைக் கோருகின்றது.

மேலும், மிக நீண்டகாலமாக வடக்கில் இறக்குமதியை குறைத்து விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து, விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் விளைபொருட்களுக்கான விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.