ஈரானில் அதிபருக்கு எதிராக தொடர் போராட்டம், வன்முறை: போலீஸ்காரர் சுட்டுக்கொலை

ஈரானில் விலைவாசி உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருகிறது. பொருளாதார பிரச்சினைகளும் தலைதூக்கி வருகின்றன. இது அரசுக்கு எதிராக மக்களை வெகுண்டெழுந்து போராட்டங்களில் ஈடுபட வைத்துள்ளது. அந்த நாட்டின் வடகிழக்கு நகரமான மஷாத் நகரத்தில் தான் கடந்த வியாழக்கிழமை இந்தப் போராட்டம் முதலில் தொடங்கியது. பின்னர் அது பல்வேறு நகரங்களுக்கும் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. அதிபர் ரவுகானியின் கோரிக்கையை நிராகரித்து 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் அங்குள்ள மக்கள் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் பல்வேறு இடங்களில் வன்முறையாக மாறி உள்ளது.

இந்த வன்முறைகளில் ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தெஹ்ரான் நகரில் நேற்று சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி வீதிகளில் வலம் வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய ஈரானின் நஜாபாபாத் நகரில் நேற்று இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. அப்போது போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வேட்டைத் துப்பாக்கியால் அந்த போலீஸ்காரர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஈரான் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. ஈரான் மக்கள் சுதந்திர வேட்கையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY