இஸ்ரேலிய குடியேறி கொலை: பலஸ்தீன கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டை

இஸ்ரேலிய குடியேறி ஒருவரை சுட்டுக் கொன்றவரை தேடி இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பிரதான பலஸ்தீன நகர் ஒன்றை சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டு வருகிறது.

மேற்குக் கரை நகரான நப்லுஸுக்கு அருகில் உள்ள யூத குடியேற்றத்தில் வசிக்கும் 35 வயது யூத மதகுரு ஒருவரே கடந்த செவ்வாய்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் பயணித்த கார் வண்டியில் 22 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீதியில் கடந்து சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

நப்லுஸை சூழவுள்ள கிராமங்களில் சோதனைகளுக்கு பின்னரே உள் நுழைய மற்றும் வெளியேற முடியும் என்று இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

கடும்போக்கு யூத குடியேறிகள் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையில் பதற்றம் கொண்ட பகுதியாக இது உள்ளது. இங்கே பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் கல்லெறிவதாக பலஸ்தீன தரப்பு கூறுகிறது.

ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அங்கீகரித்ததை தொடந்து பலஸ்தீனர்கள் கோபத்தை வெளியிட்டு வருகின்றனர். அது தொடக்கம் இதுவரை 14 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY