இலங்கை விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பு – ஐ.நா. உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இந்த சந்திப்பின்போது இணை அனுசரணை வழங்கும் செயற்பாட்டில் இருந்து இலங்கையை விலகவிடக் கூடாதென கோரிக்கை விடுத்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் உறுப்பு நாடுகளுடன் ஒரு சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது மேற்குறித்த விடயத்தையே மீண்டும் வலியுறுத்தியதாக சுமந்திரன் கூறினார். இவ்விடயத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட தீர்மான வரைபை இலங்கை மீறாமல் பார்த்துக் கொள்வது தமது கடமை என உறுப்பு நாடுகள் வாக்குறுதி வழங்கியதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கை தொடர்பான அறிக்கையை நாளை ஐ. நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் சமர்பிக்கவுள்ளதுடன் அன்றைய தினமே இலங்கை விவகாரம் பேசப்பட்டு, அதன் பின்னர் நாளை மறுதினம் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.