இலங்கை குறித்த பிரேரணை துரதிஷ்டவசமானது – கோட்டா

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது மிகவும் துரதிஷ்டவசமான ஒரு விடயமாகும் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக களமிறங்க தயராகவே உள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க நான் தயாராகவே இருக்கிறேன். மேலதிக விபரங்களை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடமே கேட்க வேண்டும்.

இப்போதைய நிலைமையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைவிட, ஸ்திரமான அரசாங்கத்தை எவ்வாறு ஸ்தாபிக்க வேண்டும் என்பதே முக்கியமானதொரு விடயமாகும்.

கொள்கை ரீதியாக முதலில் நாம் ஒன்றிணைய வேண்டும். மேலும், ஜெனீவா தொடர்பாகவும் கருத்து வெளியிட வேண்டும்.

அதாவது, உலகிலுள்ள முக்கியமான நாடுகள் பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்து அதற்கு எதிராக போரிட்டுள்ளன.

அப்படியான நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான தமது போராட்டங்களை வெற்றிகரமான ஒன்றாகவே இதுவரை கருதுகின்றனர்.

ஆனால், உலகிலுள்ள மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பை நாம் மிகவும் சிரமத்துக்கு மத்தியல் தோற்கடித்துள்ளோம்.

இந்நிலையில், இந்த பயங்கரவாதத்தை தோற்கடித்த தரப்பினருக்கு எதிராகவே சர்வதேசத்தினால் தற்போது பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இது மிகவும் பக்கச்சார்பானதும் துரதிஷ்டவசமானதுமான ஒரு விடயமாகவே நாம் கருதுகிறோம். நாம் யுத்தத்தை மட்டும் வெற்றிக்கொள்ளவில்லை.

யுத்தத்துக்கு பின்னர் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வழிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டோம். இவை அனைத்தும் மறக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் எந்தவொரு தரப்புக்கும் நன்மையளிக்கும்வகையில் செயற்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.