இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவத்தின் 70ஆவது நிறைவாண்டு இன்றாகும். இதனை மிகவும் சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலிமுகத்திடலில் 70ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

துணிச்சல், அர்ப்பணிப்பு போன்ற சிறந்த பதிவுகளைக் கொண்ட இலங்கை இராணுவமானது தேசத்தின் மிகவும் வலிமையானதும் சிறந்த சேவையையும் நாட்டிற்கு வழங்கி கொண்டுள்ள இந்த தருணத்தில் ஒக்டோபர் 10 ஆம் திகதியான இன்று தனது 70 வருடத்திற்கு தனது காலடியை எடுத்து வைக்கின்றது.

பிரிகேடியர் ஆர். சின்க்ளேரின் கட்டளையின் கீழ் இலங்கை இராணுவமானது 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி நிறுவப்பட்டது. பின்னர் தியதலாவையில் தனது சொந்த இராணுவ பயிற்சி நிலையத்தை நிறுவியதன் ஊடாக இலங்கை இராணுவத்தின் முதல் இராணுவ தளபதியாக பிரிகேடியர் அன்டன் முத்துகுமரு நியமிக்கப்பட்டார்.

கடந்த 70 ஆண்டுகளில் இலங்கை இராணுவமானது 23 இராணுவ தளபதிகளை உள்ளடக்கி திறம்பட சேவைகளை மேற்கொண்டு இராணுவத்தை வளர்ச்சியடைய செய்துள்ளது.

அத்துடன் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், தேசிய பேரழிவுகள், அவசர நிலைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒப்பிட முடியாத சேவைகளை இராணுவம் மேற்கொண்டு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிறந்த பணிகளையும் நாட்டின் தேசிய பாதுகாப்பு நிமித்தமும் மனிதாபிமான நடவடிக்கை திட்டங்களிலும் நாட்டிற்காக பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.