இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க தயார்- தினேஷ்

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள செல்வதற்கு முன்னர் கொழும்பு- பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள பௌத்த காங்கிரஸ் மண்டபத்தில் தேரர்களிடம் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஷ் குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டமை இலங்கையின் அரசியலமைப்பை முற்றிலும் மீறய செயற்பாடாகும். மக்களின் அனுமதியின்றியே இவ்வாறு இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையை மீள பெறுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுத்ததுள்ளது. எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசம் பூட்டியுள்ள விலங்கை நாம் அகற்ற வேண்டும். இதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது.

நாட்டுக்கு எதிராக கடந்த அரசாங்கம் செயற்பட்டமையினால் எவ்வாறான நிலைமையை எதிர் கொண்டுள்ளோம். நாட்டுக்கு எதிரான கருத்துகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து வருகிறது. எமது அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையை மீள பெறும் உத்தியோகபூர்வ அறிவிப்பு பேரவையில் நாளை அறிவிக்கப்படும்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க நாம் தயாராகவே இருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.