இலங்கை அரசாங்கத்தின் அலட்சியமே தாக்குதல்களுக்கு காரணம் – ரவூப் ஹக்கீம்

சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசாங்கம் கண்டிக்க தவறியதே அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இவ்வருட இறுதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தல் மிக முக்கியமான தீர்மானமிக்க தேர்தலாக அமையவுள்ளது.

இந்த தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் எவ்வாறான தீர்மானத்தினை எடுக்கப்போகின்றார்கள் என்பதை பொருத்துதான் ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகள் நிச்சயிக்கப்படும் என்ற பின்னணி காணப்படுகின்றது.

இதன் பின்னணியில் அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் மற்றும் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பெரும்பான்மை தீவிரவாதம் குறித்தும் கலந்துரையாடினோம்“ என குறிப்பிட்டுள்ளார்.