இலங்கையில் கவனிக்கப்படாத ஒரு துறையாக முன்பள்ளிக் கல்வி அமைந்துள்ளது: சிறீதரன் எம்.பி ஆதங்கம்

P1010329-600x450இலங்கையில் கவனிக்கப்படாத ஒரு துறையாக முன்பள்ளிக் கல்வி அமைந்துள்ளது .கல்வியில் ஏனைய துறைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் முன்பள்ளிப் பிரிவுக்கு வழங்கப்படுவதில்லை சின்னஞ் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தளவான ஊதியமே வழங்கப்படுகின்றது.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும் .அவர்களுக்கான ஊதியத் தொகை உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

கொக்குவில் பொற்பதி அறிவாலயத்தின் ஏற்பாட்டில் சரஸ்வதி முன்பள்ளி மற்றும் பொற்பதி இந்து அறநெறிப் பாடசாலை ஆகியவற்றின் கலை விழா அண்மையில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஜப்பான் நாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களாக உள்ளவர்கள் உயர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டில் மூன்று கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த ஒருவராலேயே முன்பள்ளி ஆசிரியராக இருக்க முடியும். வெளிநாடுகள் முன்பள்ளிக் கல்விக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் இதிலிருந்து புலனாகிறது.

இஸ்ரேல் நாட்டில் ஒரு தாய் கருவுற்றிருக்கின்ற போது தாய் கணித பாடம் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுடைய நாட்டிலே நாம் எவ்வாறான வாழ்க்கை வாழ்கிறோம் ?முன்பள்ளிக் கல்விக்கு எவ்வாறான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றோம்? எனச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நான் அண்மையில் பாராளுமன்றத்திலும் பேசியிருந்தேன். எமது முன்பள்ளி ஆசிரியர்கள் மாதம் தோறும் பெற்றுக் கொள்ளும் தொகை அரைத் தங்கத்தின் பெறுமதியாகவேனும் காணப்பட வேண்டும். அவ்வாறான நிலை தோற்றுவிக்கப்படும் போது தான் ஆசிரியர்களும் மிக ஆர்வத்துடன் தங்கள் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சூழல் உருவாகும்.

இன்று(நேற்று) இங்கே பல சிறார்களின் கலை நிகழ்வுகள் அரங்கேறியது. நடனத்தில் பெண் பிள்ளைகளுக்குத் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஆண்களும் இங்கே நிரூபித்துக் காட்டியுள்ளனர். சிறு பிள்ளைகளின் கலை நிகழ்வுகளைக் கண்டு நான் உள்ளம் மகிழ்ந்தேன். அவர்களின் உடல் அசைவு, நளின பாவங்கள் ஒவ்வொன்றும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தன. ஆகவே, அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களை நான் மனதாரப் பாராட்டுவதில் மகிழ்வடைகிறேன்.

சிறு பிள்ளைகள் மனதைப் புண்படும் வகையில் நாம் நடந்து கொள்ளக் கூடாது. அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நாம் செயற்பட வேண்டும்.அவர்களின் முகங்களில் மலரும் சந்தோசங்களை எமது வாழ்வின் சந்தோசங்களாகக் கொள்ள வேண்டும்.

பொற்பதி அறிவாலயக் கட்ட வளர்ச்சிக்காக என்னிடம் நிதியுதவி கேட்பதற்காக இந்த நிகழ்விலே என்னை எவ்வளவு தூரம் புகழலாமோ அவ்வாறெல்லாம் புகழ்ந்தீர்கள். ஆனால் அவ்வாறு நீங்கள் என்னைப் புகழ்ந்தால் நான் நிதியுதவி செய்ய மாட்டேன். இவ்வளவு தான் வேண்டுமென்று என்னிடம் உறுதியாகக் கேட்டாலே போதுமானது. இங்கு அமைக்கப்பட்டு வருகின்ற மாடிக் கட்டடத்தின் முழுமையான நிர்மாணப் பணிகளுக்கு பன்னிரண்டு இலட்சம் ரூபா வரை தேவையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னால் இதற்கென முழுமையான நிதிப் பங்களிப்புச் செய்ய முடியுமென என்னால் பொய் கூறி விட்டுச் செல்ல முடியாது. அடுத்த வருடத்துக்கான எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகை நிதியை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY