இலங்கையில் இராணுவ முகாம் அமைக்கவே அமெரிக்கா திட்டம் – ரத்தன தேரர்

சீனாவுடனான வர்த்தகப் போர் நிலவிவருகின்றமையால், இலங்கையில் இராணுவ முகாமொன்றை அமைக்கவே அமெரிக்கா தற்போது தீவிரம் காட்டி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.

மேலும், இதனை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கை என்பது விசேடமான ஒரு நாடாகும். பல விடயங்களில் இலங்கை தனித்துவமாக திகழ்ந்து வருகிறது. எமது நாட்டைப் பொறுத்தவரை கடல்வளம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதற்காகவே, வரலாற்றுக் காலம் முதல் திருகோணமலை துறைமுகம் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்படியான விசேடமான கடல் பிராந்தியத்தை தற்போது அமெரிக்காவுக்கு வழங்க பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கான ஒப்பந்தங்களை செய்துகொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தக முரண்பாடொன்று நிலவிவரும் நிலையில், இலங்கையில் இராணுவ முகாமொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக காணப்படுகிறது. இதனை அனைவரும் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.