இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள்- அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அறிக்கை

2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார். இதன்போதே இந்த துஷ்பிரயோக புள்ளிவிவரங்கள் நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது

இதன்படி, 2020இன் முதல் 15 நாட்களில் 142 துஷ்பிரயோக சம்பவங்கள், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளில், 78 துஷ்பிரயோக சம்பவங்கள், 21 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், 34 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுகளிலிருந்து பெரும்பாலான வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் குறித்த 15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்களில் 8 வழக்குகள் கடுமையான பாலியல் துஷ்பிரயோகமாகவும் மற்றும் 17 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளன.

இதேவேளை, 2012 முதல் 2020 வரை 11,998 துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 4,806 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும் 5,891 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.