இலங்கையின் நல்லாட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பில் முதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா???

b0895aae9680b7a7ecd4238519774a3a_Lஇலங்கையின் நல்லாட்சியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு முதல் தோல்வி ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் ஜனாதிபதியின் உறுதி என்று சம்பந்தன் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பு இன்று பொய்யாகிப்போயுள்ளது.

தமது விடுதலையை கோரி கடந்த 12ஆம் திகதி அரசியல் கைதிகள் சுமார் 253பேர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் 6 நாட்களில் அந்த போராட்டத்தை இடை நிறுத்தக்கோரிய சம்பந்தன்,  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உறுதியளித்தார்கள் என்ற அடிப்படையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

எனினும் இன்று அவ்வாறு எதுவுமே இடம்பெறவில்லை.

இந்தநிலையில் சம்பந்தனின் கூற்றுக்கு மாற்றுக்கருத்தையே இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் இன்று அரசியல் கைதிகளிடம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை மகசின் சிறைச்சாலைக்கு சென்று சிறைச்சாலைகள் ஆணையாளர் புஸ்பகுமார மற்றும் சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத் ஆகியோர், அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது கருத்துரைத்த சுகத கம்லத் இன்று 32பேரை விடுதலை செய்வதற்கான எந்த ஆயத்தங்களும் தமது திணைக்கள தரப்பில் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் உறுதிமொழி குறித்து தமக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமது திணைக்களம் வழக்கு உட்பட்ட நீதி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் கைதிகளை ஏமாற்றியுள்ளதாக கம்லத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள ஊடகத்ததரப்புக்களில் இருந்து சுகத கம்லத்துக்கு தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் தாம் அரசியல் கைதிகளுடனேயே கலந்துரையாடியதாக குறிப்பிட்ட அவர், அவற்றை ஊடகங்களுக்கு கூறமுடியாது என்று தெரிவித்துவிட்டார்.

இந்த சூழ்நிலையில் தமது உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றாமையை அடுத்து எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர்.

இன்று அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை குறித்து சம்பந்தனிடமும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவிடமும் ஊடகங்கள் தொடர்புக்கொள்ள முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் கைகூடவில்லை.

இதற்கிடையில் தற்போதைய சூழ்நிலையில் சம்பந்தன் தமது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் தெளிவுப்படுத்தவேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY