இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படக்கூடாது: யோகேஸ்வரன்

இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என்று ஏகோபித்த குரலில் ஒலிக்கவேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கோரி அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 19ஆம் கடையடைப்பு மற்றும் கவனயீர்ப்பு பேரணி நடத்தப்படவுள்ளது. இக்கவனயீர்ப்பு பேரணிக்கு நாம் எமது பூரண ஆதரவை வழங்குவோம்.

இக்கடையப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு வர்த்தகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இதேவேளை, அரச- தனியார் பேருந்து போக்குவரத்தை இடைநிறுத்தி நிறுத்தியும், பொதுமக்கள் பயணங்களை தவிர்த்தும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இன, மத, மொழி வேறுபாடுகளின்றி அனைவரும் இதில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும்.

நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினூடாக குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என்று ஏகோபித்த குரலில் ஒலிக்கவேண்டும்’ என அந்த அறிக்கiயில் குறிப்பிடப்பட்டுள்ளது.