இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு அறிக்கை வெளியானது!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில், அரசாங்கம் பல முக்கிய நடவடிக்கைகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

2015 மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் முக்கியமான பொறிமுறைகள் இன்னும் அமுலாக்கப்படவில்லை.

குறிப்பாக சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை. இந்தவிடயங்களை அமுலாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள 40ஆவது மாநாட்டில் புதிய பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் எனவும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.