இலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி

கொழும்பை அண்டிய பகுதிகளில் இலகுரயில் சேவை தொடங்குவதற்கான திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, எல்.ஆர்.டி. திட்டத்திற்கு மாற்று வழியைப் பார்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என கூறினார்.

இந்த திட்டம் குறித்து அமைச்சரவை விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், இது சிறந்த வழி அல்ல என்று ஒப்புக் கொண்டதாகவும் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை நிறுத்த முடிவு செய்யும் போது திட்டத்தின் செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில், உத்தேச கொழும்பு இலகு ரயில் சேவை திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் பி.பி.ஜெயசுந்தர போக்குவரத்து அமைச்சிற்கு அறிவுறுத்தியதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அண்மையில் கூறியிருந்தார்.

கொரோனா தொற்று காரணமாக தற்போதுள்ள கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இலங்கை அரசாங்கம் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கடன்களின் கீழ் தொடங்கப்பட்ட பல திட்டங்களை மீளாய்வு செய்ய போக்குவரத்து அமைச்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.

அத்தோடு மேலும் பல திட்டங்களை நிறுத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க தெரிவித்தார்.

இலகு ரயில் சேவை திட்டம் ஆரம்பத்தில் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைக்குழுவின் கீழ் தொடங்கப்பட்டது, ஆனால் புதிய அரசாங்கத்தின் கீழ் இது போக்குவரத்து அமைச்சின் கீழ் வருகிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஜப்பானிய நிதியுதவியுடன் முன்னாள் அரசாங்கத்தால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் கொழும்பு கோட்டையிலிருந்து மலாபே வரை 16 ரயில் நிலையங்களுடன் 17 கி.மீ நீளமுள்ள இலகுரக ரயில் போக்குவரத்து முறை மூலம் போக்குவரத்து திறனை அதிகரிப்பது இந்த திட்டத்தின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.