இறைவனால்தான் எமக்கு நல்ல தலைவர்களை தர முடியும்

தலைவன் என்பவன் நீதியை நிலைநாட்டுபவன். அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பவன். மக்கள் குறைகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்திப்பவன். அவனே உண்மையான தலைவனாக இருக்க முடியும்.

தலைவன் தக்கது செய்யத் தவறினால் மிகப்பெரும் அழிவுகளைத் தந்து போகும். அதனால்தான் நம் தமிழ் மன்னர்கள் நீதியை நிலைநாட்டுவதே தங்கள் கடமையயனக் கருதினர்.

மனுநீதி கண்ட சோழன் ஒரு பசு மாட்டின் துன்பம் தீர்க்க தனக்குத் துன்பம் தேடினான். பாண்டிய மன்னன் தான் வழங்கிய தீர்ப்புத் தவறு என்றுணர்ந்ததும் தன்னுயிர் நீத்தான்.

இதுபோன்று பலவற்றை உதாரணப்படுத்த முடியும். இவையயல்லாம் இறந்தகாலச் செய்திகளேயன்றி நிகழ்காலத்தில் தேடுதற்கரிய விடயங்களே.

இருந்தும் தலைவன் – தலைமை என்பது நேர்மை, நீதி, தியாகம், அன்பு, பணிவு, இன் சொல், பிறர்க்கு உதவும் மனப்பாங்கு, நடுநிலை என பண்புத் தரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் அவை எதுவும் சமகாலத்தில் இல்லாது போயிற்று.

குறிப்பாக தமிழ் மக்களின் சமகால அரசியல் தலைமை என்பது தமக்கு மக்கள் வழங்கிய ஆணைகளைக் காப்பாற்றுவதை மறந்து ஆட்சியாளர்கள் சிரித்து விட்டால் அவர்கள் பின்னால் ஓடுகின்ற மனநிலையைக் கொண்டுள்ளது.

நமக்கு இவர்கள் உதவுவார்கள். இவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று மக்கள் நம்பிவாக்களிக்க,
தேர்தலில் பெற்ற வெற்றி, பதவி ஆசையாக மாற வாக்களித்தவர்களை மறந்து அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யத்தலைப்படுவது மிகப்பெரும் கொடுமைத்தனமாகும்.

எனினும் இக்கொடுமைத்தனம் அரங்கேறுகிறது என்றால் அதற்கு நாம் செய்த தவக்குறைவும் காரணம் என்றுணர்வது அவசியம்.

மெய்ப்பாதுகாவலனை நம்பியே ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பிரதானிகள் உறங்குகின்னர். அந்த மெய்ப் பாதுகாவலன் தன் பணியை மறப்பானாயின் – விலை போவானாயின் நம்பிக்கை என்பது அந்தோ என்றாகிவிடும்.

இதுபோலத்தான் ஒவ்வொன்றும். மருத்துவரை நோயாளி நம்புகின்றான். ஆசிரியரை மாணவரும் பெற்றோரும் நம்புகின்றனர். மதத் தலைவர்களை மக்கள் சமூகம் நம்புகிறது.

இந்த நம்பிக்கைக்கு மாறாக யார் செயற்பட்டாலும் அது மிகப்பெரும் துரோகத்தனத்தை ஏற்படுத்தி விடும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஆகையால் தலைவன், நல்ல மருத்துவர், நல்ல குரு இவர்கள் வந்து வாய்ப்பதற்கு நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஆனால் சமகால சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, தமிழ் மக்களிடம் தவக் குறைவு உண்டு என்றும் அதனால்தான் இருக்க வேண்டியதை இழந்தும் இழக்க வேண்டியதை ஏற்றும் வாழும் அவலம் நமக்குக் கிடைத்துள்ளது என்று நினைப்பதில் தவறில்லை.

எனவேதான் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இறைவனிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். நல்ல தலைவர்கள் அல்லது நல்ல அரசியல் தலைமை நமக்கு கிடைக்க வேண்டும் என்று.

பிறக்கின்ற தமிழ்ப் புத்தாண்டில் இவ் வேண்டுதலை இறைவனிடம் நாம் முன்வைத்து எதிர் காலத்திலாவது ஒரு நல்ல அரசியல் தலைமையை பெற்று நிற்போம்.

LEAVE A REPLY