இர்மா புயல் தாக்கியதால் புளோரிடாவில் மூன்றில் இரு பகுதி வீடுகள் இருளில் தவிப்பு

புயல் அட்லாண்டா நோக்கி நகர்ந்தாலும், அதன் பாதிப்புகளை சரி செய்வதற்கு பல நாட்கள் ஆகும் என புளோரிடாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

புயல் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக் கப்பட்ட பகுதிகளில் மீண்டும் இணைப்பு வழங்குவதற்கு என்ஜினீயர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் தென் கிழக்கு மாகாணங்களில் மழை தொடரும் என எதிர்பார்ப்பதாக தேசிய புயல் மையம் கணித்துள்ளது.

இந்த புயலினால் புளோரிடாவில் ஏற்பட்ட உயிர்ப்பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கரீபியன் தீவுகளை இந்த புயல் புரட்டிப்போட்டபோது 37 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது. அத்துடன் ஒப்பிடுகையில் புளோரிடாவில் உயிர்ச்சேதம் குறைவுதான்.

புயல் பாதிப்பு குறித்து புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் நேற்று கூறும்போது, ‘‘மாகாணம் முழுவதும் மின்கம்பிகள் விழுந்து கிடக்கின்றன. சாலைகள் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளன. எல்லோரும் பொறுமை காக்க வேண்டும். 42 பாலங்கள் பெரிதும் சேதம் அடைந்துள்ளன’’ என்றார்.

மியாமி நகரைப் பொறுத்தமட்டில் பெரும்பாலான பகுதி, மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அங்கு 72 சதவீத வீடுகள் இருளில் தத்தளிக்கின்றன. நேபிள்ஸ் நகரம் மற்றும் அதன் புற நகர்களும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

போர்ட் லாடர் டேல்–ஹாலிவுட் சர்வதேச விமான நிலையம், மியாமி சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம் மூடப்பட்டன. புயல், வெள்ளத்தை அடுத்து கொள்ளையடிக் கும் சம்பவங்கள் நடைபெறுவதால் மியாமியில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY