இராமாயணத்தில் மாயா சீதை ஈழத்தில் மாயா சமஷ்டி

இராமாயணத்தில் மாயா சீதை என்ற சம்பவம் மிகவும் முக்கியமானது. சீதையின் தோற்றத்தில் ஒரு பெண் உருவைச் செய்து அவளை வெட்டிக் கொல்வதான காட்டாப்புத்தான் மாயா சீதை என்ற விடயம்.

சீதையை வெட்டுவது போல இராவண தரப்பு ஒரு காட்சியைக் காட்ட, அனுமன் அதிர்ந்து போகிறான். சீதையை வெட்டி விட்டார்களே என்பதே அனுமனின் பதற்றத்துக்குக் காரணம்.

கம்பராமாயணத்தைக் கரைத்துக் குடித்த கம்பவாரிதி இ.ஜெயராஜ் போன்றவர்கள் அது அனுமனின் அறிவுத் தடுமாற்றம் என்று கருத்துரைப்பர்.

எதுவாயினும் மாயா சீதை என்ற சூழ்ச்சியால் அனுமன் அதிர்ந்து போனதும் உண்மைச் சம்பவத்தை அறிவதற்கு விபூடணன் தந்திரோ பாயம் சொல்லி அதைச் செய்து முடித்தது பற்றியும் இராமாயணம் பேசும்.

இப்போது நாம் இங்கு பிரஸ்தாபிப்பது சீதை பற்றியல்ல. மாயா சீதையை உருவாக்கிய இந்திரசித்து உள்ளிட்டவர்கள் பற்றிய ஒப்பீடுகையாகும்.

சீதைக்கு பதிலாக மாயா சீதையை உருவகம் செய்து இராமர் தரப்பை நம்ப வைத்தல் என்ற விடயம் சாதாரணமானதன்று. அது ஒரு முக்கியமான இராஜதந்திரம்.

நம்பவைத்து ஏமாற்றுதல்; ஏமாற்றுவதன் மூலம் தோல்வியை ஏற்படுத்துதல்; தோற்ற பின்னர் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்குதல் என்பதுதான் அது.

இந்த இராஜதந்திரம் இப்போதும் இருக்கவே செய்கிறது. சில இடங்களில் வடிவங்களும் செய்கின்ற தரப்பினரும் வேறுபடுவதாக இருந்தாலும் மாயா சீதை எனும் இராஜதந்திரம் என்றும் இருக்கும் என்பதுதான் உண்மை.

இனப்பிரச்சினைக்கான தீர்வுபற்றி கருத்துரைக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், வரப்போகும் தீர்வில் சமஷ்டி என்ற பெயர் இல்லாமல் இருந்தாலும் சமஷ்டியின் அத்தனை அம்சங்களும் இருப்பதாகக் கூறுகிறார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கூறுவதில் ஏதேனும் உண்மைகள் உண்டா? என்று ஆராய்வது தமிழ்ப் புத்திஜீவிகளின் தலையாய கடமை.

இது ஒரு புறம் இருக்க புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் வேண்டாம் என்கின்றனர் பெளத்த மகாநாயக்கர்கள்.

பெளத்த மகாநாயக்கர்களை மீறி அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை கொண்டு வரமுடியுமா? என்பது வேறு கேள்வி.

இதேவேளை பெளத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பது பற்றி நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை என்று இரா.சம்பந்தர் கூறியுள்ளதாக இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததான செய்திகளும் வெளிவந்துள்ளன.

ஆக, இந்த நாட்டில் பெளத்தத்துக்கே முதலிடம் என்பதை இரா.சம்பந்தரும் ஏற்றுக் கொள்வதாக அந்தச் செய்தியின் பொருள் அமையும்.

அப்படியானால் பெளத்த விகாரைகளை எங்கும் அமைக்கலாம். பெளத்த விகாரைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கு பெளத்த விகாராதிபதிகளின் ஆட்சிதான் மேலோங்கும்.

நிலைமை இதுவாக இருக்க, வரப்போகும் தீர்வில் சமஷ்டி என்ற பெயர் இல்லாமல் இருந்தாலும் சமஷ்டியின் அம்சங்கள் இருக்கும் என்று இரா.சம்பந்தர் கூறுவதானது, ஒரு மாயா சீதை இராஜதந்திரமே.

பரவாயில்லை. இந்திரசித்து இராமரைத் தோற்கடிக்க மாயா சீதையை உருவாக்கினான். இங்கு எங்களை நாங்களே ஏமாற்ற சமஷ்டியல்ல; அதன் அம்சம் பொருந்திய மாயா சமஷ்டி என்று கூறுகிறோம். அவ்வளவு தான்.

LEAVE A REPLY