இராணுவத்தினருக்காக அரசாங்கம் எதையும் செய்யவில்லை- ரோஹித குற்றச்சாட்டு

போரினால் ஊனமுற்ற இராணுவத்தினருக்காக இந்த அரசாங்கம் எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்று மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசாங்கம் இராணுவத்துக்கு எவ்வாறான மரியாதைக் வழங்குகிறது என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.

30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தை, சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்தநிலையில், இராணுவத்தின் தேவைக்காக அதிகளவிலான நிதியை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் தற்போது கூறிவருகிறது. இது ஏப்ரல் முதலாம் திகதி, முட்டாள்கள் தினத்தன்று கூறவேண்டிய ஒரு கருத்தாகும்.

யுத்தத்தில் இராணுவம் இறந்திருந்தாலும், புலிகள் இறந்தாலும், அல்லது பணயக் கைதி ஒருவர் இறந்திருந்தாலும் அது இலங்கையர் என்ற அடையாளத்துடன் தான் பார்க்கப்படுகிறார்.

இந்த நிலையில், இந்த நாட்டில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊனமுற்ற இராணுவத்தினர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பிறக்கும்போது, எம்மைப் போன்று ஆரோக்கியமாகவே இருந்தனர்.

எதற்காக இந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது? அவர்களது குடும்ப சொத்தை பாதுகாக்க மேற்கொண்ட சண்டையினாலா? இல்லை, நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட போரினாலேயே, அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறு இருக்கும்போது, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இத்தனைக் காலத்தில், இவ்வாறான இராணுவத்தினர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என நான் கேட்க விரும்புகிறேன். இதற்கு நிதியமைச்சு உள்ளிட்ட அனைவரும் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.