இராணுவத்தினரால் இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்ட காணிகள் அரசிற்கு சொந்தமானவை – அரசாங்க அதிபர்

முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட கல்லாறு ஹுனைஸ் நகர் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டு வரும் நிலங்கள் அரச காணிகளென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் இராணுவம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆகியவற்றினால் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பிலும், வீட்டுத்திட்டம் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாகவும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் ஹுனைஸ் நகர் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தில் 87 வீடுகள் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 87 வீடுகள் அமைப்பதற்கான காணிகளில் 65 காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 22 வீடுகளுக்கான அனுமதிப்பத்திரமும் இருக்கின்றது. குறித்த காணிகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானது.

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் இராணுவம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆகியவற்றினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான எக்காணியும் அப்பகுதியில் இல்லை” என தெரிவித்தார்.