இரவை வெளிச்சமாக்கிய பாடல்

கண்ணதாசன்…

‘காவியத்தாயின் இளையமகன், காதல் பெண்களின் பெருந்தலைவன். அவன் குயில்கள் பாடும் கலைக்கூடம். தாரகம் பதித்த மணிமகுடம்’.

இந்தப்பாட்டுக்காரன் ஒரு கோப்பையில் குடியிருந்தவன். இருந்தாலும் ‘யாப்பு’ என்னும் தமிழ்க்கோப்புக்குள் கட்டுண்டு கிடந்தவன். இவனது எழுதுகோல் மகுடம் கழற்றிய போதெல்லாம் எதுகையும், மோனையும் அணிவகுத்து நிற்கும்.

தமிழ்த்திரையிசைப் பாடல்களை ஓர் இலக்கிய வகையாக முதன்முதலில் மாற்றிக் காட்டியவர் கவிஞர் கண்ணதாசன்தான். தொட்டில் முதல் கட்டில் வரை அனைத்து மனித உணர்வுகளையும் பாடல்களில் பதிவு செய்த பாட்டுச்சித்தர்.

சீர்களில் சித்து விளையாட்டைச் செய்த வார்த்தைச் சித்தர். விருத்தங்களால் அனைவரது வருத்தங்களைப் போக்கியவர். பலரின் பாடல் வரிகள் காற்றை அசுத்தம் செய்த வேளையில் சங்க இலக்கியத்தின் சாறுபிழிந்து, காற்றில் தவழவிட்டு காற்றை யும், மனித மனங்களையும் சலவை செய்தவர்.

இந்தப் பாட்டுக்காரனின் பாட்டு வரிகளில் தெறித்த இலக்கிய முத்துக்கள் எண்ணற்றவை. அவற்றுள் ஒன்றுதான் ‘அந்தாதி’ என்னும் இலக்கியம். திரைப்படப் பாடல்களில் ‘அந்தாதித்தொடை’ என்பது மிகவும் அரிதான ஒன்று. அதைக் கண்ண தாசன் மூன்று முடிச்சு திரைப்படத்தில் மிகவும் ரசித்து எழுதி யிருப்பார். இதோ அந்தப்பாடல் வரிகளின் தொடக்கம்…

‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்’

இதுதான் அந்தாதிப்பாடல்.

பாடல்தரும் மலர்க்கணைகளில் நீங்களும் மயங்கிவிட்டீர்களா? இதுதான் அந்தாதி தரும் இலக்கிய மயக்கம்.

‘அந்தாதி’ என்றால் என்ன என்கிறீர்களா?

அதன் இலக்கணத்தைப் புரிந்துகொண்டால் படிக்கும்போது மட்டுமல்ல நினைக்கும்போதெல்லாம் இன்பத்தைத் தந்து கொண்டே இருக்கும். அந்த அந்தாதி தரும் இலக்கிய இன்பத்தை இப்போது சுவைத்து மகிழ்வோம்.

அந்தாதி இலக்கியமும், இலக்கணமும்

தமிழில் உள்ள 96 வகையான சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி. கி.பி. 9–ம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண ஆசிரியர்கள் அந்தாதி என்னும் இவ்விலக்கிய மரபு பற்றி கூறியுள்ளனர்.

‘செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே’ என்று தண்டியலங்காரமும்,

‘அந்தம் முதலாத் தொகுப்பது அந்தாதி’, ‘அசையினும், சீரினும் அடிதொறும் இறுதியை முத்தா இசைப்பின் அது அந்தாதித் தொடையே’ என்று யாப்பருங்காலக்காரிகையும் இலக்கணம் கூறுகின்றது. இதில் அந்தாதி என்றால் நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசை, சொல், அடி இவற்றுள் ஒன்றோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாவதாக வரும்படி அமைத்துப்பாடுவது.

இறுதிப்பாடலின் இறுதியில் அடுத்து வரும் முதற்பாடலின் முதலும் ஒன்றாக இணையும்படி மாலைபோலத் தொடுத்து முடிப்பதும் அந்தாதி எனப்படும். இதனைச் ‘சொற்றொடர்’ என்றும் வழங்குவர். ஒரு செய்யுளுக்குள்ளே ஓரடி இறுதி மற்றையடிக்கு முதலாக அமையும்படி தொடுப்பதும் உண்டு. அது ‘அந்தாதித்தொடை’ என்றும் வழங்கப்படும்.

ஏற்றப் பாட்டில் தொடுத்த சொல்லையே பிடித்துத் தொகுத்து தனி அந்தாதியாக முடிப்பதும் உண்டு. அப்படிப்பிறந்த,

‘முப்பது உடனெடுத்து மூங்கில் இலைமேலே
மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரை
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே’

என்ற நாட்டுப்புறப்பாடல் அத்தகைய அந்தாதிப்பாட்டாகும்.

பாடல்களை நினைவுபடுத்துவதற்கு அந்தாதி அமைப்புப் பேருதவியாக இருந்து வருகிறது. எனவேதான் பிற்காலத்தில் அந்தாதி இலக்கியங்கள் பெருமளவில் எழுந்தன. சைவம், வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய எல்லா சமயத்தவரும் அந்தாதிப் பாடல்களை இயற்றியுள்ளனர்.

இப்படி சமயத்தின் அடிப்படையில் அமைந்த ஓர் இலக்கியம் தான் அபிராமி அந்தாதி. இந்த அந்தாதிப்பாடல் தான் இருட்டைப் போக்கி வெளிச்சம் தந்தது. ஆம், அமாவாசையை பவுர்ணமியாக்கிய வெளிச்சப்பாடல்கள்.

அருளில் திளைத்த அபிராமி பட்டர்

‘தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி தன் கடைக்கண்களே’

என்று அன்னை அபிராமியின் கடைக்கண் அருள்பெற்று பாடிய பாடல்தான் அபிராமி அந்தாதி.

இதனை இயற்றியவர் அபிராமி பட்டர். இவரது வரலாற்றையும், நூலின் வரலாற்றையும் அறிகின்றபோது மெய்சிலிர்க்கச் செய்கின்றது.

நீர்வளமும், நிலவளமும் நிறைந்த சோழவள நாட்டிலே காவிரியின் தென்கரையில் திகழும் திருக்கடவூர் என்னும் திருத்தலத்தில் பிறந்தவர் அபிராமிபட்டர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.

இளமை முதற்கொண்டே அபிராம வல்லியிடம் எல்லையில்லா பக்தியுடையவராகத் திகழ்ந்தார். பக்தர் என்பதைவிட ‘அபிராமி பித்தர்’ என்று அழைப்பதே அவருக்குப் பொருந்தும். அதனால் அவரது இயற்பெயர் மறைந்து அபிராமிபட்டரானார்.

தேவியின் அருளால் இயற்கையாகவே கவிதைபாடும் ஆற்றல்பெற்றவர். இளம் வயதிலேயே திருமணம் நிகழ்ந்தாலும் இல்லறத்தில் பற்றற்ற நிலையிலேயே இருந்தார். அவரது சிந்தையும், செயலும் அபிராமி அம்மையின் திருப்பாத கமலங்களிலேயே ஒன்றி இருந்தது. அதனால் அம்மையின் மென் மனம் கரையத் தொடங்கியது. தமது அன்பு அடியாரின் அளவற்ற பக்தியை உலகிற்கு உணர்த்த ஓர் அற்புதமான நிகழ்வு நடந்தது.

சரபோஜி மன்னரின் சந்திப்பு

அப்போது தஞ்சைத் தரணியை சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஓர் அமாவாசை அன்று காவிரிப்பூம்பட்டினம் சென்று கடலில் நீராடிவிட்டு அப்படியே திருக்கடவூர் வந்து அமுத கடேசுவரரையும், அபிராமியையும் வணங்கி வர ஏற்பாடு செய்யப்பட்டது. அரசன் வருவதை அறிந்து திருத்தலமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளங்களோடு வேதங்களும் ஒலித்துக்கொண்டிருந்தன. அமுதகடேசுவரரான சிவலிங்கத்திற்கு சங்காபிஷேகம் நடத்துவதற்காக ஆயிரத்தெட்டு சங்குகளை தயார்நிலையில் வைத்திருந்தார்கள்.

சரபோஜி மன்னன் முதலில் ராஜகோபுரத்தை வணங்கியவாறு உள்ளே சென்றான். சங்காபிஷேக வழிபாட்டை முடித்துவிட்டு அப்படியே அபிராமவல்லியின் சன்னிதிக்கு வந்து கொண்டிருந்தான். மன்னரைக் கண்டதும் மரியாதையாக அனைவரும் விலகியே நின்றனர்.

ஆனால் ஒருவர் மாத்திரம் ஞான உலகத்தில் மோன நிலையில் நின்றபடி நின்று கொண்டே இருந்தார். அவர் ஒரு பித்தர் என்று அவரைப்பற்றிய பழிச்சொற்களைச் சொன்னார்கள்.

கேட்ட மன்னர் அடியவரை அணுகி விசாரித்தார். அப்போது அவர், ‘என் பெயர் அபிராமி பட்டர். நான் இங்கு பஞ்சாங்கம் படிப்பவன். அம்மையின் அழகையும், புகழையும் எந்நேரமும் மனங்குளிரப் பாடுபவன்’ என்றார்.

‘அப்படியா! இன்று அமாவாசை உண்டா? எத்தனை நாழிகை இருக்கிறது’ என்று கேட்டார் மன்னர்.

அப்பொழுது அவரது திருநயனங்கள் அம்மையின் திரு மேனியை அலங்கரித்துக் கொண்டிருந்த செம்பொன் பட்டு வஸ்திரம், நவரத்தினங்களின் பிரகாசம் அத்தனையும் ஒன்று சேர்ந்து ஒளிப்பிழம்பாக வீசியதைக் கண்டார்.

சட்டென்று, ‘இன்று அமாவாசை இல்லையே, பொங்கிவரும் பெருநிலவு பாரெல்லாம் ஒளிவீசும் பவுர்ணமி அல்லவா’ என்றார்.

அப்பொழுது அவரது பார்வையெல்லாம் அம்மையின் பேரொளியிலேயே லயித்திருந்தது.

பட்டர் சொன்னதைக் கேட்டதும் ‘என்ன! இன்று பவுர்ணமியா!’ ஆச்சரியப்பட்டார். சரிதான் இவர்கள் எல்லாம் சொன்னதுபோல் பித்தர்தான் என்று தீர்மானித்தார். இருந்தாலும் இன்று முழுநிலவு நாளாக இல்லையெனின் இவருக்குத் தக்க தண்டனையளித்தாக வேண்டும் என்று கூறிச்சென்றார்.

இரவை வெளிச்சமாக்கிய பாடல்

அப்பொழுது அங்கிருந்தவர்கள் ‘ஏன் ஐயா! இப்படித்தான் மன்னரிடம் ஏறுக்குமாறாகப் பேசுவதா? அமாவாசையைப் போய், பவுர்ணமி என்றாயே நன்றாயிருக்கிறது உமது பேச்சு’ என்று கேலி செய்தனர்.

எல்லோரும் இப்படி கேலி செய்வதைப் பார்த்து சுய நினைவு பெற்று, ‘என்ன பவுர்ணமியா? தவறாகச் சொல்லிவிட்டோமே’ என்று மனம் குழம்பி வீட்டிற்குச் சென்றார்.

நடந்த நிகழ்ச்சியை மனைவியிடம் சொன்னார். மனைவியும், மனம் கலங்கி ‘‘அம்மையைச் சரணடையுங்கள். ஆவன செய்வாள்’’ என்று தைரியம் சொன்னாள்.

அப்போது அவர் ‘அன்பர்களுக்கு அருளும் அபிராமி அம்மையே, எனக்கு ஏன் இந்த மயக்கம். என்றும் புன்னகை தவழும் முகத்தவளே, என் அகத்தே கோவில் கொண்டவளே, என்னுடைய குறையெல்லாம் தீர உன்னைப் போற்றி வணங்குகிறேன். என் தவறுக்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டே திரும்பவும் ஆலயத்திற்குள் ஓடினார்.

ஆலயத்தின் வாசலில் பெரிய தீக்குழி ஒன்றை நிறுவினார். அதன் இருபக்கமும் கால்கள் நட்டு, அதன் மேல் விட்டம் போட்டுத் தீக்குழிக்கு நடுவாக நூறு புரிகள் கொண்ட பெரிய உறியொன்றைக் கட்டித்தொங்கவிட்டார். இந்தச்செய்தியறிந்து ஊரிலிருந்த பக்தர்கள் அனைவரும் ஓடிவந்தனர்.

அபிராமிபட்டர் முதலில் குழியில் நெருப்பை வளர்த்துவிட்டு கையில் ஏடும், எழுத்தாணியும், கத்தியும் எடுத்துக்கொண்டு நெருப்பின்மேல் தொங்கிக்கொண்டிருந்த உறியின் மீது ஏறி அமர்ந்தார். அதற்குள் அவரது மனைவியும் அங்கு ஓடி வந்தாள். திருமாங்கல்யத்தைக் கண்களிலே ஒற்றிக்கொண்டு ‘அம்மையே நீயே கதி’ என்று அபிராமியின் திருப்பாதங்களைப் பற்றிக்கொண்டாள்.

உறியில் அமர்ந்த பட்டர் உளறிய வாய்க்குப் பரிகாரம் தேட ‘அரிகண்டம்’ பாடி உயிர்துறக்க முடிவு கொண்டார். தலைமீது கரம் குவித்தார். ராஜகோபுரத்தை தரிசித்து கோவில் உள்ளே எழந்தருளியுள்ள விநாயகப்பெருமானை வணங்கினார்.

பக்தியால் மெய் உருகி ‘‘தாரமர் கொன்றையும், சண்பக மாலையும்’’ என்னும் காப்புச் செய்யுளைப்பாடி, அதையே அவரது திருக் கரமும் எழுதத் தொடங்கியது. பின்னர் ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்’ என்று தொடங்கும் அந்தாதியைப் பாடினார். அவரது பாடலைக் கேட்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

இதில் உள்ள நூறு பாடல்கள் அந்தாதியாக அமைந்திருந்தாலும் ஒரு பாடலின் இறுதியில் வரும் தொடரே அடுத்துவரும் பாடலின் முதற்சீராக அமைந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு பாடலையும் பாடிமுடித்தவுடன் உறியின் கயிறுகள் ஒவ்வொன்றும் அறுந்துகொண்டே வந்தன. இப்படி எழுபத்தெட்டுப்பாடல்கள் பாடியாயிற்று. எழுபத்தொன்பதாவது பாடலாகிய ‘‘விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கே, வேதம் சொன்ன விழிக்கோ வழிபட நெஞ்சுண்டு’’ என்று பாடி உயிரை மாய்ப்பது என்று தீர்மானித்தார்.

உடனே ஏட்டையும், எழுத்தாணியையும் கீழே வைத்தார். அந்த நேரத்தில் அபிராமியம்மை அவர் முன்னே தோன்றினாள். உடனே தம் திருச்செவியிலே அணிந்திருந்த ஜொலிக்கும் தாடங்கம் ஒன்றைக் கழற்றி விண்ணை நோக்கி வீசினாள். எல்லாம் கண்இமைக்கும் நேரத்தில் நடந்தேறியது.

ஆகா! இந்தக்காட்சியை என்னவென்று சொல்வது. உதிக்கின்ற செங்கதிர்போல் அத்தாடங்கம் பேரொளி வீசி இருண்ட வானிலே பவுர்ணமி போல தண்ணொளியைப் பொழிந்தது. அப்போது ‘என் பக்தனே! நீ அரசனிடத்தில் கூறியபடி முழுநிலவை விண்ணில் பார்’ என்று அம்பிகை திருவாய் மலர்ந்து மறைந்தாள். அதைப்பார்த்த மக்கள் பரவசமடைந்தனர். அரசனும் கண்டு அதிசயித்தான்.

அபிராமி பட்டரும் அன்னையே என்னையும் உம் அடியாரில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டாயே? உன் கருணைதான் என்னே என்று உருகி உறியிலிருந்து கீழே இறங்கினார்.

முடி வணங்கா மன்னனோ பட்டரின் திருப்பாதங்கள் முன் அடிபணிந்தான். அபிராமிபட்டரைத் தொழுது எழுந்த மன்னன், ‘சுவாமி! எனது பிழையை பொறுத்தருள்க, அடுத்தாற்போல இத்திருவந்தாதியைத் தொடர்ந்து பாடி அருள் செய்ய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டான்.

அபிராமி பட்டரும் அதற்கு இசைந்து அபிராமியம்மையின் சன்னிதிக்கு நேரே சென்று அமர்ந்து தொடர்ந்து அந்தாதியைப் பாடத்தொடங்கினார். தொடர்ந்து பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் உறியின் புரி தானே அறுந்து கொண்டு வந்தது. இறுதியாக நூறாவது பாடலான ‘‘குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ்கொங்கை வல்லி’’ என்ற பாடலின் மூலம் அம்மையின் திருவடித்தாமரைகளைத் தஞ்சம் புகுவதற்கு உகந்த வழியைக் காண்பித்தார். பக்தர்கள் மெய் சிலிர்த்தனர்.

பாடல்தரும் பயன்

அபிராமி அந்தாதியின் முதற்பாடலில் ‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ என்று தொடங்கினார். அதுபோல் நூறாவது பாடலின் முடிவில் நெஞ்சில் ‘‘எப்போதும் உதிக்கின்றவே’’ என்று முடித்துள்ளார். இதுதான் அந்தாதி தரும் இலக்கிய இன்பம் இந்தப்பாடல் தரும் பயனை,

‘ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்
தாளைப் புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்
குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக் கண்ணியைத் தொழு
வார்க்கு ஒரு தீங்கில்லையே’

என்று இந்த பக்தி இலக்கியத்தைப் படிப்பதனால் வரும் பயனையும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வுலகில் கெட்ட தந்தை இருக்கலாம், சகோதர, சகோதரி இருக்கலாம். ஆனால் கெட்ட தாய் இருக்க முடியாது. அதனால்தான் வாய் நிறைய ‘ஆத்தாள்’ என்று பக்திப் பரவசத்தோடு அழைக்கின்றார்.

தாய் வழிபாட்டைப் போற்றும் இந்த அந்தாதித் தமிழைப் போற்று வோம். அருள்பாலித்து நம்மையெல்லாம் ஆளும் தாய் தான் அன்னைத் தமிழையும் அழியாமல் போற்றிக் காக்க வேண்டும் என்று நாளும் வேண்டுவோம்.

(இன்பம் தொடரும்)

LEAVE A REPLY