இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாது தடுக்கும் சில உணவுகள்.

மனித உடலில் இதயத்திலிருந்து உடல் முழுவதும் ஒட்சிசன் நிறைந்த இரத்தத்தை வெவ்வேறு திசுக்களுக்கு வழங்குவது நாடிகள். இந்த நாடிகளின் உட்புறச் சுவர்களில் ப்ளேக்குகள் உருவாக ஆரம்பிக்கும் போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. ப்ளேக்குகள் என்பது கொழுப்பு, செல்லுலார் கழிவுகள், கல்சியம் மற்றும் ஃபைபிரின் ஆகியவற்றால் ஆனது.

தற்போது அநேகமானோருக்கு இதயத்திற்குச் செல்லும் நாடியில் அடைப்புள்ளது. இந்தப் பிரச்சினைக்கு அறுவைச் சிகிச்சைகள் இருந்தாலும், மாத்திரைகளின் மூலமும் சரிசெய்திட முடியும். ஆனால் இன்று ஏராளமான மக்கள் இம்மாதிரியான பிரச்சினையைச் சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கங்கள் போன்றவையும் தான்.

 

ஆனால் இப்பிரச்சினை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நாடிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒருசில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டால், நிச்சயம் இதைத் தவிர்க்கலாம். இப்போது நாடியில் ஏற்படும் அடைப்பைத் தடுக்க உதவும் சில உணவுகளைக் காண்போம். அவற்றைப் படித்து அன்றாட உணவில் சேர்த்து உங்கள் நாடிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இதன் அபாயம் யாருக்கு அதிகமுள்ளது?

யாருக்கு இதன் அபாயம் அதிகம் உள்ளது? யாருடைய உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின் (LDL – கெட்ட கொழுப்பு) அதிகமாகவும், அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின் (HDL – நல்ல கொழுப்பு) குறைவாகவும் உள்ளவர்களுக்கு நாடிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகமுள்ளது. அத்தோடு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு நாடிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்.

நாடி அடைப்பு எம்மாதிரியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்?

நாடி அடைப்புகள் கரோனரி நாடி நோய், கரோடிட் நாடி நோய், புற நாடி நோய், மாரடைப்பு மற்றும் பெருமூளை விபத்து என்னும் பக்கவாதம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்சினைகளைத் தடுக்க வேண்டுமானால், நாடிகளில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும், ஆரோக்கியமான உணவுகளை உண்பதும் நாடிகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழியாகும்.

இப்போது நாடிகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் சில உணவுகளைப் பார்ப்போம்.

பூண்டு

ஒருவர் அன்றாடம் பூண்டு சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோல் அளவு குறையும் மற்றும் நாடிகளின் ஆரோக்கியம் மேம்படும். ஆய்வு ஒன்றில் அன்றாட உணவில் பூண்டு சேர்த்தால், முதுமையில் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. எனவே தினமும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.

மாதுளையில் விற்றமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற சக்தி வாய்ந்த அன்டி-ஒக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது நைட்ரிக் ஒக்ஸைட் உற்பத்தியைத் தூண்ட உதவி புரிந்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் நாடிகளில் ப்ளேக் உருவாக்கத்தின் அபாயத்தையும் குறைக்கும். ஆகவே அடிக்கடி மாதுளையைச் சாப்பிடுங்கள்.

சால்மன் மீன்

சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது நல்ல கொலஸ்ட்ரோல் அளவை அதிகரிக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் நாடிகளில் இரத்த உறைவைக் குறைக்கிறது. மேலும் அடிக்கடி சால்மன் மீனை சாப்பிட்டால், இரத்த அழுத்தமும் குறையும்.

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள், நாடிகளில் கொழுப்பு படிவதைத் குறைக்க உதவுவதோடு, வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் நாடிகள் தடிமனாவதைத் தடுக்கும். அத்தோடு மஞ்சளில் இருக்கும் விற்றமின் பி6 ஹோமோசிஸ்டைன் அளவை சீராக்க உதவி புரிந்து, ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, இரத்த நாளங்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. மேலும் மஞ்சள் கொழுப்பு ஒட்சிசனேற்றம் மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே நாடிகள் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் கலந்த பாலைக் குடியுங்கள்.

ஒலிவ் எண்ணெய்

ஒலிவ் எண்ணெயில் பாலிஃபீனால்கள் என்னும் அன்டி-ஒக்ஸிடன்ட்டுகள் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இவை உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன. அதே சமயம் இதயத்திற்குச் செல்லும் நாடிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆகவே அன்றாட சமையலில் முடியுமான வரை ஒலிவ் எண்ணெயைச் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.