இரண்டு மூன்று மாதங்களில் திறக்கப்படும்! வடக்கில் விமல் வீரவன்ச வழங்கிய வாக்குறுதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஒட்டுசுட்டான் பகுதியில் இயங்கிவந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மிக நீண்ட காலமாக இயங்காத நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை இயங்க வைப்பதற்காக பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக பார்வையிட்டு வந்திருந்த நிலையிலும் இதுவரை தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் கைத்தொழில் சிறு கைத்தொழில் அரசு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த ஓட்டுத் தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார்.

பார்வையிட்டதன் பின்னர் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச மக்கள் மத்தியில் தெரிவித்தார். இன்று காலை 10 மணிக்கு குறித்த தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சருக்கு மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அமைச்சர் தொழிற்சாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்ட பின்னர் அங்கிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அங்கு உரையாற்றிய அமைச்சர் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் குறித்த ஓட்டுத் தொழிற்சாலை இயங்க வைக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

1983 ம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்டிருக்கும் குறித்த தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் பிரதேச மக்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றியிருந்தது. ஆகவே மீண்டும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் இதனுடைய வேலைகளை ஆரம்பிப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் இப்போது தீர்மானித்திருக்கிறது.

இதனூடாக இந்த பிரதேச மக்களுடைய பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு இந்த தொழிற்சாலை ஊடாக இந்த நாட்டினுடைய பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கும் எதிர்பார்த்து இருக்கின்றோம்.

இதற்காக நாங்கள் புதிய தலைவர் ஒருவரை நியமித்து இருக்கின்றோம் அவர் மிகவும் உணர்வுபூர்வமாக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக அவர் தயாராக இருக்கின்றார். இந்தப் பிரதேச மக்கள் அனைவரிடமும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த வேலைத் திட்டங்களுக்காக எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கபடுவது என்பது இந்த பிரதேச மக்களினுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடாகும்.

எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் இந்த வேலைத் திட்டங்களை ஆரம்பித்து அதனுடைய முழுமையான சேவைகளை இந்த பிரதேசத்திற்கு வழங்குவதற்கு எதிர்பார்த்து இருக்கின்றோம். அதேபோன்று எதிர்காலத்தில் இதில் பழுதடைந்த இயந்திரங்களுக்கு பதிலாக ஒரு பகுதியினர் ஊடாக புதிய இயந்திரங்களை பொருத்துவதற்காக எதிர்பார்த்திருக்கின்றோம்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் இந்த புதிய அரசாங்கமானது கைத்தொழில் மற்றும் விவசாயங்களை ஊக்குவிப்பதற்கான அரசாங்கமாக இருக்கின்றது. விசேடமாக வடகிழக்கில் குறிப்பிட்ட ஒரு காலமாக பாரிய பிரச்சினையாக இருக்கின்ற வேலை வாய்ப்பு பிரச்சினைக்கு ஒரு தீர்வாகவும் இது அமையும். இந்த பிரதேச மக்களினுடைய மனங்களிலே விதைக்கப்பட்ட விடயம் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கு அடுத்த நாளில் ராணுவ ஆட்சி இடம்பெறும் என்ற பயம்.

இவை அனைத்தும் பொய் என்பதை தற்போது இடம்பெறும் ஆட்சி முறை ஊடாக மக்களுக்கு விளங்கியிருக்கும் அதற்கு மாறாக இப்போது வடகிழக்கினுடைய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கு வேலைவாய்ப்பற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஊடாக இந்த அரசாங்கம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளிகளை உருவாக்குவதற்கும் அதனூடாக பலன்களை அடைவதற்கும் சில தரப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறான பயங்கரவாத குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏமாற்றப்படாது எம்முடன் இணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுத்தார். இன்றைய இந்த விஜயத்தின் போது அமைச்சருடன் அமைச்சரின் செயலாளர் பீங்கான் கூட்டுத்தாபன தலைவர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் முல்லைத்தீவு மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.