இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு, இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

டெல்லி உச்சநீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கு, ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க இன்று மீண்டும் தொடர்ந்தும் விசாரிக்கப்படவுள்ளது.

இரட்டை இலைச்சின்னத்தை தேர்தல்கள் ஆணையகம் அ.தி.மு.க.விற்கு வழங்கியதை எதிர்த்து, டி.டி.வி.தினகரனின் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு நீதிபதிகளான சிஸ்தானி, சங்கீதா டிங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறித்த வழக்கை நீதிபதிகள் இன்றை திகதிக்கு ஒத்திவைத்திருந்தனர். இதற்கிணங்க இவ்வழக்கு இன்று இடம்பெறவுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாக பிளவு கண்டது.

எனினும் பின்னர் எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்த நிலையில், அவர்கள் அ.தி.மு.க.வின் தலைமைகளாக அங்கம் வகித்ததால் அவர்களிடம் தேர்தல் ஆணையகம் இரட்டை இலைச் சின்னத்தை ஒப்படைத்தது.

எனினும் இன்னொருபுறம், ஜெயலலிதா ஊழல் வழக்கின் தொடர்ச்சியாக சிறையிலுள்ள சசிகலா தலைமையிலான டி.டி.வி.தினகரன் சார்பான அணி, இரட்டை இலை சின்னம் தமக்கே சொந்தம் எனக் கோரி அ.தி.மு.க.வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.