இம்ரான் தாஹிர் சுழலை சமாளிப்பதில் இந்திய அணி வீரர்கள் கவனமாக செயல்பட வேண்டும், எச்சரிக்கிறார் சச்சின்

தென் ஆப்ரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் பந்துவீச்சை, இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாகக் கையாள வேண்டும் என்று முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தி உள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடர் குறித்து சச்சின் நேற்று கூறியதாவது:

தென் ஆப்ரிக்க அணி மிகவும் வலுவாக அமைந்துள்ளது. டி வில்லியர்ஸ், ஹாஷிம் அம்லா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். டேல் ஸ்டெயின், மார்னி மார்கெல் வேகப்பந்துவீச்சும் அச்சுறுத்தும் வகையில் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. கூக்ளி வகை சுழற்பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் மிகச் சிறப்பாக செயல்படுவார். அவரது பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர். திறமையும், மன உறுதியும் கொண்ட இளம் வீரர்கள் எத்தகைய சவாலையும் எதிர் கொள்ளத் தயாராகவே உள்ளனர்.

டி20, ஒருநாள் போட்டிகளை விடவும் டெஸ்ட் தொடரில் நமது அணி எப்படி விளையாடப் போகிறது என்பதையே நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தென் ஆப்ரிக்க அணி எப்போதுமே மிக வலுவான அணியாகவே அமைந்திருக்கும். சுமாரான தென் ஆப்ரிக்க அணியை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. இம்முறையும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை. 1991ல் தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, ஸ்டேடியங்களில் ஆயிரக் கணக்கில் திரளும் ரசிகர்களைப் பார்த்து மிரட்சி அடைந்ததை பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரண்டதை அவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். நாங்கள் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்கா சென்று விளையாடியபோது, அந்நாட்டு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை மறக்கவே முடியாது. டர்பன் நகர விமான நிலையத்தில் இருந்து நாங்கள் தங்க வேண்டிய ஓட்டல் வரை 30 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையின் இரண்டு பக்கமும் ரசிகர்கள் கூடி வரவேற்றது எனக்கும் புதிய அனுபவமாக இருந்தது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். வாழ்க்கை பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணிக்கு எனது ஆதரவு தொடர்ந்து கொண்டே இருக்கும். அதில் மிகுந்த திருப்தி அடைகிறேன். இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY