இன அழிப்புக் குற்றவாளிகளுக்கு வெள்ளையடிக்கும் யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்

யாழ்ப்பாணம் மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உதாசீனம் செய்யும்வகையில் யாழ் மாநகர முதல்வர் தொடர்ச்சியாக இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் மரம் நடுகை வேலைத்திட்டத்திற்கு வடக்கு மாகாண ஆளுநருடன் இணைந்து இராணுவத்தினரை ஆர்னோல்ட் ஈடுபடுத்தியிருந்தார். அதற்கு யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். இந்நிலையில் சபையின் ஏகமனதான தீர்மானத்துடன் மரம் நடுகை உள்ளிட்ட எந்தவொரு சிவில் நடவடிக்கையினும் யாழ் மாநகரப் பகுதிக்குள் இராணுவத்தினர் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.

எனினும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஓரிரு தினங்களிலேயே முதல்வர் ஆர்னோட்டினால் மீண்டும் மரம் நடுகை வேலைத்திட்டத்தில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டடிருந்தனர். இதனை படங்களுடன் சுட்டிக்காட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வ.பார்த்திபன் கண்டன அறிக்கை ஒன்றினையும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மரம் நடுகை வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா இன்று காலை நடைபெற்றது. பண்ணைப் பிரதேசத்தில் நடைபெற்றது. அங்கு பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டதோடு இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த நிகழ்வு ஒரு இராணுவ நிகழ்வாகவே நடைபெற்றதாக அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

நீங்கள் கூறுவதைக் கூறுங்கள் நான் இப்படித்தான் நடப்பேன் எனும் வகையில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இவ்வாறு மக்கள் மயப்பட்ட நிகழ்வுகளை இராணுவ மயமாக்கி இனப் படுகொலை புரிந்த சிங்கள இராணுவத்திற்கு வெள்ளையடிக்க முற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் குறிப்பாக தமிழர்க்காய் தன்னுயிரை ஈகம் செய்த தியாகி பொன் சிவகுமாரின் நினைவேந்தல் நாளில் யாழ் மாநகர முதல்வர் யாழ் நகர மத்தியில் இராணுவத்தினரை வைத்து விழா எடுப்பது தமிழரசுக் கட்சியின் போக்கிலித்தன அரசியலையே காட்டிநிற்கின்றது.

LEAVE A REPLY