இன்று பிலிப்பைன்ஸ் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிலிப்பைன்சுக்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று மணிலா சென்றடையும் சிறிலங்கா அதிபர், எதிர்வரும் 19ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்று பிரிப்பைன்ஸ் அதிபரின் பேச்சாளர் சல்வடோர் பனீலோ தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபருக்கும் பிலிப்பைன்ஸ் அதிபர் டுரேரேவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மலாகானங் மாளிகையில் இடம்பெறும்.

இதன்போது, அரசியல், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்படும்.

இந்தப் பயணத்தின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் செல்வதற்கு சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார்.

லொஸ் பனோசில் உள்ள அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவகத்துக்கும் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மணிலாவில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார்.

சிறிலங்காவில் 1978ஆம் ஆண்டு தற்போதைய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பதவி உருவாக்கப்பட்ட பின்னர், பிலிப்பைன்சுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது அதிபர் மைத்திரிபால சிறிசேனவே ஆவார்.

இதற்கு முன்னர், சிறிலங்காவின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க மாத்திரமே, பிலிப்பைன்சுக்கு சென்ற சிறிலங்காவின் உயர் தலைவராவார். அவர் 1976இல் பிலிப்பைன்ஸ் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.