இனி ஒருபோதும் மோடி பிரதமராக வரமுடியாது- வைகோ ஆவேச பேச்சு

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் நிறைவு பயண பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் சோழமண்டலம் பஞ்சபிரதேசம் ஆகி விடும். அதன்பிறகு அதானி, அம்பானி கம்பெனிகள் எரிவாயு எடுக்க அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதிப்பார்கள். இது தானே உங்களின் திட்டம்.

நீங்கள்(நரேந்திரமோடி) முதல்முறையாக 7½ கோடி தமிழர்களின் எதிர்ப்பை சந்தித்திருக்கிறீர்கள். இனி ஒருக்காலும் மோடி பிரதமராக வரமுடியாது, வர விடவும் மாட்டோம். அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் தி.மு.க. முக்கிய பங்காற்றும், மத்தியில் இனி பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, தமிழகத்தில் எடப்பாடி கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது, என் தம்பி மு.க.ஸ்டாலின் தான் இனி முதல்-அமைச்சர்.

இவ்வாறு வைகோ பேசினார்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமானால் தமிழ்நாட்டில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலும், மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும் ஆட்சி மாற்றம் நிகழவேண்டும்.

இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். போராட்டத்தின் தன்மையை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கோரிக்கையை நிறைவேற்றித்தர முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

தமிழர்களை காப்பாற்ற, மாநில உரிமைகளை காப்பாற்ற, அரசியல் சட்டத்தின் மாண்பை காப்பாற்ற விழிப்புணர்வு போராட்டத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காக காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி மக்கள் வெள்ளத்தில் நீந்தி, கடைசியாக எங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ள செயல்தலைவரை வரவேற்கிறோம். இந்த போராட்டம் அடுத்த போராட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

மோடியை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் கருப்பு சட்டை அணிந்திருக்கிறார்கள். தமிழ் இனத்தின் உணர்வு எரிமலை போன்றது. இது பெரியார் மண், நாம் தெளிவாக ஒன்று பட்டு இருக்கிறோம். இனிமேல் நமக்குள் பேதம் இல்லை. திராவிடம் வளர வேண்டும், காவிகள் அழிய வேண்டும், பெரியார் மண்ணில் எவனும் வாலாட்ட முடியாது. கவர்னர் மாளிகையோடு நாங்கள் நிற்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், மு.க. ஸ்டாலின் 3 கட்ட போராட்டங்களை அறிவித்தார். அதன்படி இந்த போராட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அ.தி.மு.க.வை எதிர்த்து அல்ல. மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது. கர்நாடக தேர்தலை காரணம் காட்டி ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் துரோகம் செய்கிறது மத்திய அரசு.

இதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வேடிக்கை பார்க்கிறது. துணை நிற்கிறது. மத்திய அரசும், கர்நாடக அரசும் சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏமாற்றி வருகிறது. தமிழக விவசாயிகளுக்கு நரேந்திரமோடி அரசு துரோகம் செய்கிறது.

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பு மு.க.ஸ்டாலின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. அவரது வழியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், 9 கட்சிகளும் மக்களை நம்பி தான் இணைந்து இருக்கிறோம். இந்த இயக்கங்கள் இன்றோடு நிறைவு பெற்றது, முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். இதற்கு பிறகும் தொடர்ந்து செயல்படும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், காவிரி பிரச்சினைக்காக போராடி வரும் 8 கோடி தமிழர்களையும் பிரதமர் மோடி ஏமாற்றி வருகிறார். அவர் ஒட்டு மொத்த தமிழர்களை மட்டும் கொச்சைப்படுத்த வில்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையே கொச்சைப்படுத்தி உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் ஓயாது என்றார்.

இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப்பிறகு ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசுக்கு எதிராக, எடப்பாடி ஆட்சி செய்கிற துரோகத்துக்கு எதிராக ஒன்று திரண்டு நிற்கிறது. தமிழகத்தின் நலன்களை குழிதோண்டி புதைத்த மோடியால் தமிழகத்தில் தரைவழியாக பயணம் செய்ய முடியவில்லை. காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காத மோடிக்கு, தமிழ்மண்ணில் காலடி எடுத்து வைக்க அருகதையில்லை என்றார்.

LEAVE A REPLY