‘இனி, அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான்!’ – சசிகலா உறுதியும் திவாகரன் கடிதமும்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக தினகரன் தொடர்வார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு, குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறார் சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, ஐந்து நாள் பரோலில் வெளியில் வந்திருந்தார். பரோல் விடுப்பு காலத்தில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவர் நடராசனை சந்திப்பதற்கும் குடும்ப உறவுகளிடம் விவாதிக்கவும் நேரத்தைச் செலவிட்டார். பரோல் விடுப்பு முடிந்த நிலையில், நேற்று பெங்களூரு சிறைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய பென்ச், ‘ வரும் டிசம்பர் மாதத்துக்குள் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், சசிகலா குடும்பத்துக்குள் மீண்டும் விவாதம் நடந்துள்ளது.

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். ‘இந்தத் தேர்தலில் வெற்றிபெற அரசின் அனைத்து இயந்திரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவார். அதற்கேற்ப நமது வியூகம் இருக்க வேண்டும்’ என அவர் பேசியிருக்கிறார். சென்னையில் சசிகலா இருந்த ஐந்து நாட்களும் திவாகரன் வந்து சந்திக்கவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக அவர் தீவிர ஓய்வில் இருப்பதால், சசிகலா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மீண்டும் சிறைக்குச் செல்வதற்கு முதல்நாள் திவாகரனிடமிருந்து சசிகலாவுக்குக் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், ‘கட்சியின் எதிர்காலத்துக்காகச் செய்யவேண்டியது என்ன?’ என்பதை விரிவாக எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தில் இருந்த பல விஷயங்களை சசிகலா ஏற்றுக்கொண்டார்” என விவரித்தார் சசிகலா குடும்பத்து பிரமுகர் ஒருவர்,

ஆர்.கே.நகர் தேர்தல்குறித்து நேற்று சசிகலாவிடம் விவாதித்துள்ளனர் குடும்ப ஆட்கள். அப்போது பேசிய குடும்பத்துக்கு மூத்தவர் ஒருவர், “போட்டி போடுவதுகுறித்து சரியான முடிவெடுத்துக் களமிறங்க வேண்டும். உங்களுடைய (சசிகலா) செல்வாக்கில் இருந்துதான் தினகரனுக்குப் பலம் சேர்கிறது. எனவே, உங்கள் படத்தை நிராகரித்துவிட்டு, அவர் பிரசாரம் செய்யக்கூடாது. பதவிக்கு வந்த பிறகு, முதல்வரும் அமைச்சர்களும் செய்த துரோகத்தை முன்னிறுத்தித்தான் தினகரன் களத்தில் இறங்க வேண்டும். இந்தப் பிரசாரம்தான் மக்கள் மனதில் எடுபடும். மேலூரிலும் திருச்சியிலும் கூடிய கூட்டமே இதற்கு சாட்சி. கட்சி பேனர்களில் உங்கள் படத்துக்கு அடுத்தபடியாகத்தான் தினகரன் படம் இடம்பெற வேண்டும். நாம் போட்டியிட்டால், செந்தில்பாலாஜியோ பழனியப்பனோ வெற்றிவேலோ கேள்வி கேட்க மாட்டார்கள். இவர்கள் எல்லாம் நமது குடும்ப உறுப்பினர்கள் போலத்தான். பொருளாதார பலத்தோடு நாம் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்” எனப் பேசினார்.

இதையடுத்துப் பேசிய சசிகலா, ‘துணைப் பொதுச் செயலாளராக தினகரனே தொடர்வார். போர்க்களத்தின் இடையில் நிற்கும்போது தளபதியை மாற்ற முடியாது. எனக்கு அடங்கித்தான் மற்றவர்கள் இருக்க வேண்டும். நாம் இருக்கும் இந்தக் கட்சியில் (அ.தி.மு.க அம்மா அணி), பொதுச் செயலாளருக்குத்தான் அதிக அதிகாரம். இந்த சட்டதிட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆர்.கே.நகர் வெற்றிக்குக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அவர்களின் உழைப்பைப் பொறுத்து பின்னாட்களில் பதவி வந்து சேரும். எடப்பாடி பழனிசாமி நடத்தியது அவர்கள் அணிக்கான பொதுக்குழு. அதற்கும் நமது கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருங்கிணைப்புக் குழுவை நடத்துவது அவர்கள் விருப்பம். கட்சி நிர்வாகிகளை மாற்றுவதற்கான முழு அதிகாரமும் எனக்குத்தான் இருக்கிறது. இன்னும் மூன்று வருடங்களுக்குள் வெளியில் வந்துவிடுவேன். அதன்பிறகு, என்னுடைய தலைமையில் கட்சி நடக்கும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதும் ஒற்றைத் தலைமைதான். இதற்கு மாறாக தினகரன் செயல்பட்டால், அவர்மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன். கட்சிக்கான கூட்டம் சேர்ப்பதற்கு குடும்பத்து ஆட்கள் உழைப்பார்கள். அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை தினகரன் அளிக்க வேண்டும்’ எனக் கறாராகக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்” என்றார் விரிவாக.

“ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியை குடும்பத்துக்கான கௌரவமாகப் பார்க்கிறார் சசிகலா. ‘தேர்தலில் வெற்றிபெற்றால், மக்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்பது உறுதியாகிவிடும் என்ற மனநிலையில் இருக்கிறார். கடந்தமுறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் வரை, வாக்காளர்கள் மனம் குளிரும் வகையில் செயல்பட்டார் தினகரன். எனவே, ‘தினகரன் போட்டியிட்டால், கட்டாயம் வெற்றிபெறுவார்’ எனவும் நம்புகிறார். ‘பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே, ஆட்சியில் உள்ளவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்ற ஃபார்முலா ஆர்.கே.நகரிலும் தொடரும்’ என்பதில் உறுதியாக இருக்கிறது ஆளும்கட்சி. எதிர்க்கட்சிகளின் வியூகமும் தேர்தல் ஆணையத்தின் கழுகுப் பார்வையும் தினகரனுக்கு எந்த மாதிரியான சோதனைகளை அளிக்கப்போகிறது என்பது தேர்தல் நாளில் தெரிந்துவிடும்” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

LEAVE A REPLY