இனிமேல் எமக்காக குரல் கொடுக்க வேண்டாம் – தமிழ் தலைமைகளை எச்சரிக்கும் உறவுகள்!

தமிழர்களுக்கு இதுவரையில் தீர்வை பெற்றுத்தராத தமிழ் தலைமைகள், இனிமேல் தமக்காக குரல் கொடுக்க வேண்டாமென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தமக்கான வழியை தாங்களே பார்த்துக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயகத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தினரால் வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

785 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகியது.

கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஊர்வலமாகச் சென்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வவுனியா பஜார் வீதி ஊடாக வவுனியா தபால் அலுவலகத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபடும் கொட்டகையை சென்றடைந்தனர். அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

‘இதன்போது தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவளிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேசத்துடன் இணைந்து தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் தமிழ் தலைமைகளை தேர்ந்தெடுப்போம்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியிருந்தனர். மேலும் ஐரோப்பிய, அமெரிக்க கொடிகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது உறவுகளை தேடி மூன்று வருடங்களாக தாம் தெருவில் நிற்கும் வேளையில், அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து செய்தியை தெரிவிக்கின்றனரென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா இதன்போது குற்றம் சுமத்தினார்.