இனவாதத்திற்கு உயிரூட்டும் அற்ப அரசியல் முயற்சி

tkn-edito‘நாட்டில் இனவாதத்தைத் தூண்டுவதற்கு பாராளு மன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம்’ என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, ‘இனவாதம் பேசியதால் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வி அடைந்தது.

இந்நாட்டு மக்கள் இனவாதத்தை ஏற்றுக்கொள்ளாது நிராகரித்தனர். எல்லா இன மத மக்களும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடன் வாழவே விரும்புகின்றனர். இதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். உண்மையில் இனவாதத் தின் கோர முகத்தை இந்நாட்டு மக்கள் நன்கறிந்துள்ளனர்.

கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் இரத்த ஆறு ஓடவும், சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படவும், ஆயுதப் போராட்டம் தலை தூக்கவும் இனவாதம் பெரும் பங்களிப்பை நல்கியது. கடந்த வருடம் அளுத்கம, தர்காநகர் மற்றும் பேரு வளையில் ஏற்பட்ட கலவரத்திற்கும் சேதங்களுக்கும் இனவாதம் அளித்த பங்களிப்பை நாட்டு மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

அதேநேரம் இனவாதம் காரணமாக இந்நாடு இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. உயிரிழப்புக்கள், ஊகங்கள், சொத்தழிவுகள் மாத்திர மல்லாமல் ஆயிரக்கணக்கான மூளைசாலிகளும் நாட்டை விட்டு வெளியேறினர். அத்தோடு நாடும் அபிவிருத்தியில் பல தசாப்தங்கள் பின்தங்கியுள்ளது. இவற்றை முழு நாட்டு மக்களுமே அறிவர்.

இருந்தும் கூட அற்ப அரசியல் இலாபம் தேடவென இன வாதத்தைப் பயன்படுத்துபவர்கள் இருக்கவே செய்கின்றனர். இது பெரும் கவலைக்குரிய நிலைமையாகும்.

அதிலும் இந் நாட்டு தலைமைப் பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்ட மொன் றில் உரையாற்றும் போது இந்நாட்டில் தமிழரும் முஸ்லிம்க ளும் தம்மிஷ்டபடி செயற்பட்ட காலம் முடிந்து விட்டது’ என்று கூறி வெளிப்படையாகவே இனவாதத்தைக் கக்கினார். ஆனாலும், அவரது இனவாதத்தை நிராகரித்த நாட்டு மக்கள், அவரை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடையச்செய்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்று தமது மெதமுலன இல்லத்திற்கு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி ‘தாம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களால் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தாம் தூக்கிப் பிடித்த இனவாதத்திற்கு நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பே இது என்பதைப் புரிந்து கொள் ளாததன் வெளிப்பாடே இது.

இவ்வாறான நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு பிரசார நடவடிக்கைகளுக்கே செல்லவில்லை. ஐ.ம.சு. கட்சி இத் தேர்தலிலும் தோல்வி அடைந்தது. நாட்டின் தலைமைப் பதவியை வகித்தவர் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இனவாதத்தை தூக்கிப் பிடித்தும் கூட அதனை நாட்டு மக்கள் அங்கீகரிக்கவில்லை.

இவற்றிலிருந்து பாடம் படிக்காத முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதர வான சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கம் அமைந்தது முதல் நாட்டு மக்களின் நிலைப்பாட்டுக்கு முரணாக இனவாதத்தைத் தூக்கிப் பிடித்து அற்ப இலாபம் பெற்றிடலாம் என மனப்பால் குடித்து வருகின்றனர்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் சுபீட்சத்தைக் கருத்தில் கொண்டு இன நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வென நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது.

இருந்தும் இவ்வரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் இனவாதக் கண்ணோட்டத்தோடு இவர்கள் நோக்குகின்றனர்.

இவ்வாறான நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதியின் மாவட்டத் தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் மஹிந்த அமரவீர இனவாதத்தைத் தூண்ட பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஐ. ம. சு. முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதும் முன்னாள் ஜனாதிபதியின்ஆட்சிக் காலத்தில் 12 ஆயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட போது வாய் திறக்காதவர்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த 39 சந்தேக நபர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டமைக்காக கூச்சலிடுவது வேடிக்கையானதும் நியாயமற்றதுமாகும்” என்றார்.

குறுகிய தீய மனப்பான்மையுடனும், இனவாதத்துடனும் சிந்திப்ப தாலும் செயற்படுவதாலும் நாட்டில் விமோசனமும் சுபீட்சமும் ஏற்படாது. இதற்கு இந்நாடு கடந்து வந்த பாதை நல்ல உதாரணமாகும்.

அதனால் இனவாதத்தை கைவிட்டு சகலரும் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுகளுடனும் செயற்பட முன்வர வேண்டும். அதேநேரம் இனவாதத்தை தூக்கிப் பிடிப்பவர்களை முற்றாக நிராகரிக்க மக்கள் முன்வர வேண்டும். என்னதான் பிரச்சினைகள் என்றாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பேசித் தீர்க்க முடியாத, பிரச்சினை எதுவுமே இருக்க முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது ஒவ்வொ ருவரதும் பொறுப்பாகும்.

LEAVE A REPLY