இனங்களுக்குமிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு தயார்- இரா.சம்பந்தன்

இலங்கையில் மீண்டும் அனைத்து இனங்களுக்குமிடையில் ஒற்றுமையும் ஐக்கியமும் ஏற்பட, தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பினர் உள்ளிட்ட தேரர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றக் கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடு இன்னும் பழைய நிலைமைக்கு மீளவில்லை. மேலும் தற்போதைய சூழ்நிலையில் அனைத்து மக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகவும் தேவையாகவுள்ளது.

ஆகையால் இவ்விடயங்களில் எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்தே பௌத்த மதக்குருக்களுடன் கலந்துரையாடினோம்.

அந்தவகையில் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தி பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்” என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.