இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர்: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

ஆண்டுதோறும் சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கும்போது கவர்னர் உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குவதால், அன்றைய தினம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற இருக்கிறார்.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, காலை 9.55 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டசபைக்கு வர இருக்கிறார். அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் செல்வார்கள். சபாநாயகர் இருக்கையில் அமரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், சரியாக காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் உரையாற்ற தொடங்குகிறார்.

அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை விவரித்து சுமார் ஒரு மணி நேரம் அவர் பேச இருக்கிறார். அவர் பேசி முடித்ததும் அவரது உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அவர் வாசித்து முடித்ததும் நாளைய சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். அதன் பிறகு, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், கூட்டத் தொடரில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்வது?, எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்து நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும்.

அனேகமாக, பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வரை (13-ந் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்க இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள்.

பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழ்நிலையில், நாளை சட்டசபை கூட்டம் தொடங்க இருப்பதால், இந்தக் கூட்டத் தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சட்டசபைக்கு அவர் வர இருப்பதால் இங்கேயும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை காட்டும் என தெரிகிறது.

ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எந்த வகையில் எதிர்ப்பை காட்டுவது என்பது குறித்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது. அதே நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரனும் சட்டசபை கூட்டத்தில் முதல் முறையாக பங்கேற்க இருக்கிறார். ஆனால், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனி ஒருவராக அவர் சபைக்கு வர இருக்கிறார். அவருக்கு பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் இருந்த இடம் ஒதுக்கப்படும் என தெரிகிறது. என்றாலும், ஒரு சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக சட்டசபையில் குரல் கொடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல், எதிர்க்கட்சிகள் தரப்பில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்தும், நெல்லுக்கான ஆதார விலையை மேலும் உயர்த்துவது குறித்தும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகத்திடம் பெற்றுத்தருவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்புவார்கள் என தெரிகிறது. எனவே, இந்த சட்டசபை கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.

LEAVE A REPLY