இந்தோனேசியாவில் காடுகளுக்கு தீ வைப்போரை சுட்டுத்தள்ள ராணுவ அதிகாரி உத்தரவு

இந்தோனேசியாவில் உள்ள காடுகளில் அடிக்கடி தீப்பிடித்து பெருமளவில் சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக வறட்சியான காலங்களில் ஏற்படும் காட்டுத் தீயானது, அண்டை நாடுகளான சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் வரை பரவும். இந்த ஆண்டின் கோடைக்காலம் தொடங்கும் முன்பே, காடுகளில் தீப்பிடிக்கும் சம்பவம் மிக அதிகமாக உள்ளது.

ஜூலை 27-ம் தேதி நிலவரப்படி 173 இடங்கள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள பகுதியாக கணிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து ஜூலை 30-ம்தேதி 239 இடங்கள் மிகவும் வெப்பம் அதிகம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை ஊழியர்களுடன் தேசிய பேரிடர் தடுப்பு முகமையும் போராடி வருகின்றது. எனினும், தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

காடுகளில் சிலர் வேண்டுமென்றே தீ வைப்பதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. எனவே, அதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டால் அவர்களை சுட்டுத் தள்ளும்படி ஜாம்பி மாகாண ராணுவ அதிகாரி இன்று உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தெற்கு சுமத்ரா மாகாணத்திலும் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் காட்டுத் தீயின் உக்கிரம் மேலும் அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் தடுப்பு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY