இந்திய மொடலை ஆதரிக்கும் வேட்பாளரையே ஆதரிப்போம் – ஆனந்தசங்கரி திட்டவட்டம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்திய மொடலிலான (முறையிலான) தீர்வு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளருக்கே ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்போது ரணசிங்க பிரேமதாச இந்திய முறையிலான தீர்வுக்கு ஆதரவாக செயற்பட்டார்.

அதேபோன்று 2005ம் ஆண்டு இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வின்போது இந்திய முறையிலான தீர்வு திட்டத்திற்காவது முயற்சி எடுக்கப்படும் என அப்போதைய ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

சமஷ்டியினை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டவர் தமிழ் மக்கள் வாக்களிக்காமையால் தோற்கடிக்கப்பட்டார். அப்போது சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்களிக்க வேண்டாம் என கூறினர்.

அன்று சமஸ்டி முறையில் வேட்பாளராக களம் இறங்கியவர் வெற்றிபெற்றிருந்தால், இன்று சமஷ்டி கிடைத்திருக்கும். ஆனால் சமஸ்டியை சிங்கள மக்கள் விரும்பவில்லை.

எனவேதான் நாம் கோரும் இந்திய முறையிலான தீர்வுக்கேனும் சம்மதம் தெரிவிக்கும் வேட்பாளரிற்கு ஆதரவை வழங்குவோம்” என அவர் தெரிவித்தார்.