இந்திய- சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கிடையிலான, நான்காவது இருதரப்பு கடற்படைப் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, இரண்டு நாடுகளினதும் கடற்படை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

SLINEX என்ற பெயரில் சிறிலங்கா- இந்திய கடற்படைகள் ஆண்டு தோறும், கடற்படை கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

நான்காவது ஆண்டாக, நடக்கவுள்ள SLINEX 2018 கூட்டுப் பயிற்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயும் பேச்சுக்கள், விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்திய தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடந்த மே மாதம் 29ஆம், 30ஆம் நாள்களில் நடந்த இந்தப். பேச்சுக்களில், சிறிலங்கா கடற்படையின் கடற் பயிற்சிக்கான கட்டளை அதிகாரி கப்டன் பிரதீப் ரத்நாயக்க, நந்திமித்ர போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் தம்மிக விஜேவர்த்தன, நடவடிக்கை அதிகாரி கொமாண்டர் நடுன் குணசேன, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் சுரேஸ் டி சில்வா, ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தியக் கடற்படை தரப்பில், கப்டன் விக்ரம் மெஹெரா, கப்டன் ரஞ்சித் சர்மான உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

SLINEX 2018 கூட்டுப் பயிற்சி எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் நாள் தொடக்கம், செப்ரெம்பர் 2ஆம் நாள் வரை சிறிலங்காவில் நடைபெறவுள்ளது.

இதில் இரண்டு நாடுகளினதும் போர்க்கப்பல்கள் பங்கேற்கவுள்ளன.

LEAVE A REPLY