இந்திய அழுத்தத்தில் இருந்து அரசாங்கத்தால் தப்ப முடியாது- சம்பந்தன்

இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த, இந்திய அரசு ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “13வது திருத்தம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும்.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மோடிக்கும் இடையே இடம்பெற்ற காணொளி உரையாடலின்போது, 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. அது உண்மையில் பயனுள்ள ஒன்று மாத்திரமன்றி மதிப்புக்குரியது. ஆகவே அதனை பாராட்டுகின்றேன்.

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, சட்டம், நீதி, சமத்துவம் மற்றும் சுய மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை இந்திய அரசு தொடர்ந்து முன்வைத்து வருகின்றது.

இந்த நிலைப்பாடு, இதற்கு முற்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் சுட்டிக்காட்டப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.