இந்தியா வசமாகிறது மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகள்

மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்குகள் வழங்கப்பட்டது போல, மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்கு இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்கு அனுமதி அளிக்கும் அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் உடன்பாட்டில் சிறிலங்காவின் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனமும், இந்தியாவின் விமான நிலைய அதிகாரசபையும் கையெழுத்திடவுள்ளன.

இரண்டு தரப்புகளும் கலந்துரையாடிய பின்னர் அமைச்சரவைப் பத்திரத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.

மத்தல விமான நிலையம் ஆதாயத்தைத் தரும் திட்டமாக இல்லாததால், அதன் 70 வீதத்துக்கும் குறைவான பங்குகளை ஏற்க இந்தியா மறுத்து வருகிறது,

விமான நிலையங்களின் மூலம் ஒரு இரவில் இலாபமீட்ட முடியாது என்றும் அதற்கு 15 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

முதலில் மத்தல விமான நிலையத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளவே இந்தியா விரும்பியது, எனினும், நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, 40 ஆண்டு குத்தகை உடன்பாடாக கையெழுத்திட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

எனினும், இரண்டு தரப்பும் இந்தக் கூட்டு முயற்சி உடன்பாட்டை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்ய முடியும்.

அத்துடன் பங்கு விகிதம் தொடர்பாகவும் இருதரப்பு இணக்கப்பாட்டுன் மாற்றங்களைச் செய்யயும் முடியும் என்றும் கூறப்படுகிறது.