இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உதவி பெறும் பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ–முகமது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவம் உதவியுடன் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு ஊடுருவுகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதி வேலைகளில் ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர் என ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

உதாம்பூர் ராணுவ தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதி தேவராஜ் அன்பு, காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து 300 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. எல்லையில் தெற்கு பகுதியில் 185-220 பயங்கரவாதிகளும், வடக்கு பகுதியில் 190-225 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக திட்டமிடலில் பாகிஸ்தானுக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது.

இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 192 பாகிஸ்தான் வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்றார். மேலும் சஞ்சுவான் ராணுவ முகாம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் செயல்பாடு என்பது சிக்கலானது மற்றும் சவாலானது. நாம் உடனடியாக பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று நான் உணரவில்லை. நாம் நம்முடைய வியூகத்தை திட்டமிடவேண்டும், அதன்படி செயல்பட வேண்டும்,” என கூறிஉள்ளார்.

LEAVE A REPLY