இந்தியாவின் நடுநிலையைக் கோருகிறார் விக்கி

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையை தமிழர்கள் கோருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் தரப்பு நடுநிலையாளராக இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.

“இந்த தீர்மானத்துக்கு வரும் எந்தவொரு அணியுடனும் நாங்கள் நிச்சயமாக இணைவோம்.

எந்தவொரு தீர்வும் தெற்கில் இருந்தே வரை வேண்டும். சட்டப்பூர்வமாக எங்களுக்கு என்ன தேவை என்று மட்டும் நாங்கள் கேட்கலாம்.

இந்திய – சிறிலங்கா உடன்பாட்டில், 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக எங்களின் சார்பாக இந்தியா கையெழுத்திட்டது.

இந்தியா எமது நெருங்கிய அயல் நாடு. இந்தியா நடுநிலையாளராக வந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு தவறு செய்திருக்கிறோம் என்பதை தெற்கில் உணர்ந்து கொண்டு ஒரு தீர்வுக்கு வர வேண்டும்.

எங்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும், நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய இறுதி தீர்வை வழங்கக் கூடிய எவரையும் நாங்கள் ஆதரிப்போம்.

ஆனால், வெறும் சொற்களால் அளிக்கப்படும் வாக்குறுதிகளை ஏற்க முடியாது. ஒரு புரிந்துணர்வுக்கு வர மூன்றாவது தரப்பு எமக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் இல்லை. நான் ஒரு நீதிபதியாக இருந்தேன், அரசியலில் ஈடுபடவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் ஒரு முகாமை ஆதரிப்பதில் எனக்கு சிரமம் இல்லை. ஆயினும், எனது கட்சி உறுப்பினர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.